கலிலியோவின் பெண்.

அப்பா!

இது உனக்கு என்
125 -வது கடிதம்.

பழக் கூடைகளோடும்..
பரிசுப் பொருட்களோடும்...
வழக்கம் போலவே
இந்தக் கடிதத்தையும்
திருட்டுத் தனமாய்
அனுப்பி இருக்கிறேன்.

மாதா கோவிலின்
மணி ஓசையோடு...
கன்னியர் மாடத்தில்..
தெரிந்து மறையும்
நான் உனக்குத் தெரிகிறேனா?
அப்பா.

வானத்தைத்
தொலைநோக்கியில்
பார்க்கத்தெரிந்த உனக்கு
ஏன்...
வாழ்க்கையைத்
தொலை நோக்காய்
பார்க்கத் தெரியவில்லை?

சமூகத்தின் அங்கீகாரம்
இல்லாத
குழந்தைகளின் வலி
இத்தனை மேதையான
உனக்கு எப்படித்
தெரியாமல் போயிற்று?

மதம்...
போதிக்கப் படுபவர்களுக்கு
உண்மையையும்..
போதிப்பவர்களுக்குத்
தவறையும்
கற்றுக் கொடுப்பதாகவே
இருந்திருக்கிறது.

நான்-
உண்மையைக்
கற்றுக் கொண்டாலும்..
போதிப்பவர்களால்
தவறாகவே
நடத்தப் படுகிறேன் அப்பா.

மோசமான..உணவு..
வசிக்கத் தகுதியற்ற அறைகள்..
வேஷதாரிகள்...மத்தியில்..
வாழ்க்கை
நீ கண்டறிந்து
சொன்ன உண்மைகளை விட
அதிகமாய் வலிக்கிறது அப்பா.

விஞ்ஞானத்தின் சிறகுகளை
மதம் முறித்துவிட...
நீ இரவும் பகலுமாய்
கண்டறிந்த
இந்த உண்மைகளே
உன்னை எரித்துவிடக் கூடும்
அப்பா!

வன்முறைகள்...தாளாமல்..
தங்கை...
இறைவனின் திருவடியில்
இருக்க
நானும்...விரைவில்
அங்கேதான் இருப்பேன் அப்பா..

என்றாலும்..
இருக்கும் கணம் வரை...
உன் நலனைத்
தேவனின் மொழியால்
எல்லாக் கணங்களிலும்
பிரார்த்திக்கும்...

அன்பு மரியா.



****************நன்றி! திரு. எஸ். ராமகிருஷ்ணனின்
கலிலியோ...மண்டியிடவில்லை..புத்தகத்தின்
கட்டுரையை...கவிதையாக்கம் செய்துள்ளேன்.

எழுதியவர் : rameshalam (26-Jul-12, 6:23 pm)
பார்வை : 194

மேலே