ஏழைத் தாயின் நேர்மை

முச்ச்சந்தியின் ஒதுக்குப்புறம்
கூடை நிறைய கொய்யாப்பழம்
கடை பரத்தி வைத்திருந்தான்
கிராமத்து ஏழை வியாபாரி

அவசர வேலை எனச் சொல்லி
தாயை கடையைப் பார்க்கச் சொன்னான்
நம்மை போன்றவர் விலை கேட்டால்
கிலோ இருபத்தைந்து எனச் சொல்லு
வசதியாய் தெரிபவர் விலை கேட்டால்
கிலோ முப்பத்தைந்து எனச் சொல்லு
வசதியாய் வருபவருக்கு
காசு பற்றி கவலையில்லை
அதிகம் கேட்பது தப்பில்லை
சொல்லிச் சென்றான் விரைவாக

காரில் வந்த குடும்பத்தாருக்கு
இரண்டு கிலோ தாய் விற்றாள்
ரூபாய் ஐம்பதைப் பெற்றாள்
ஓடி வந்த மகன் கேட்டான்
நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டியா ?
ரூபாய் இருபது போச்சே ...
புலம்பிய மகனிடம்
ஆண்டவன் கொடுத்தது போதுமையா
ஆள் பார்த்து விலை சொல்லக் கூடாதையா
மகனிடம் சொன்ன ஏழைத் தாயிடம்
நிறையவே இருந்தது
போதுமென்ற மனமும்
நேர்மையான உள்ளமும்


( நேற்று நான் நேரில் கண்ட உண்மைச் சம்பவம் இது. நகரத்தில் வாழ்பவர்களை விட கிராமத்தில் வாழ்பவர்களிடம் நிறையவே நேர்மையும் ,பெரும்போக்கான எண்ணமும் நிறைந்திருப்பதை உழவர் சந்தையில் காய்கறிகளை கொண்டு வந்து விற்கும் கிராமத்து வியாபாரிகளிடம் நிறையவே கண்டிருக்கிறேன். பலரும் கண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்)

எழுதியவர் : அலாவுதீன் (26-Jul-12, 6:51 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 276

மேலே