011 -- நித்திலக் குவியல்

நித்திலக் குவியல் என்பது ஒரு மாதாந்திர இலக்கிய ஏடு.அதை வெளியிடுபவர்கள் -மயிலை சிவமுத்து என்ற மாமனிதரால்,1931-இல் தோற்றுவிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, தமிழினத்திற்குப் பெருமை தரும் வகையில் நிலைப்பெற்றிட்ட, எண் 41 இப்ராகிம் தெரு, சென்னை -600 001 என்ற முகவரியிலிருந்து இயங்கிவரும் 'மாணவர் மன்றம்' என்ற அமைப்பு.

அது வருடம் தோறும்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மேனிலைப் பள்ளிகள்,உயர், மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ளும், கட்டுரை,கதை,கவிதை, ஓவியம் கைஎழுத்துக்கான கலைப் போட்டிகளை நடத்திவருகின்றது. 2012 -ஆம் ஆண்டுக்கான போட்டிகளையும் தற்போது அறிவித்துள்ளார்கள்.[பார்க்க நித்திலக் குவியல் ஜூலை மாத இதழ்-விலை ரூ.5 /-மட்டுமே]

அதே ஜூலை இதழில் முனைவர் ஆறு. அழகப்பன் அவர்கள் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்கள்.
தலைப்பு:
இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு செல்வது
எப்படி?
விவரம் பின்வருவதே:

பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்களின் பவள விழா தொடர் நிகழ்வினை முன்னிட்டு, அனைத்தும் உலகமயமாக்கப்பட்ட இக்காலக் கட்டத்தில், இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு செல்வது எப்படி? என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்த பவள விழாக் குழு முடிவு செய்துள்ளது.
புதிய உலகத்தில் படிக்கும் கல்விப் பிரிவுகளாலும், பணிகளாலும்,வாழும் இடங்களாலும்,தமிழ் மொழி ஆர்வம் குன்றித் தமிழ் இலக்கியப் புதையலில் ஒன்றைக் கூடத் தேடி அறியாதவர்களாகவும், அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறைந்தவர்களாகவும் உள்ளனர். தந்தைக்கும், தாய்க்கும் ஒரு கடிதம் எழுதும் ஆற்றல் கூட இன்றைய இளைஞர்களிடம் இல்லை. ஒரு திருக்குறள் கூடச் சொல்லத் தெரியாத தமிழ் இளைஞர்கள் மாதம் ஓர் இலட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வாழும் வாழ்வியல் வளத்தாலும், ஊடகங்களில் வரும் நிகழ்வுகளை மட்டும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர். இப்படிக் கூறிக் கொண்டே போகலாம்! பேச்சுத் தமிழ், உறவுத் தமிழ், முதலியவைகள் அயல்மொழிக் கலப்பால், முகத்தில் மண்டிய மருக்கள் போல அம்மொழிக் கலப்புப் பல்கி விட்டன. இவற்றை முற்றிலும் உணர்ந்த நாம் இக்களைஎடுப்பைச் செய்யாமல் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறோம்.
எனவே தமிழகத்தில் பல இடங்களில் வாழும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் இத் தலைப்பினை ஒட்டித் தம் கருத்துக்களை அனுப்பி வைத்தால் சிறப்பான வழிகாட்டுதலுக்கு உரிய கட்டுரைகள் எழுதிய ஆசிரியர்கள் சிறப்பாக ஊக்குவிப்பதுடன் , அவர்களில் சிறந்த கட்டுரையாளர் பத்தாம் கட்டப் பவள விழாக் கருத்தரங்கிற்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரியினைக் கீழே தந்துள்ளோம்:

ஆ. குருநாதன், பவளவிழாக் குழு, தமிழ்ச்சுரங்கம்,
50 ,ஏ,வேங்கதேசநகர் முதன்மைச் சாலை, விருகம்பாக்கம்- சென்னை-92 .
----------
நித்திலக் குவியல் இலக்கிய இதழைப் பெற விரும்புவோர் ஆயுள் சந்தாவான ரூ.500 /-ஐ மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் மன்ற முகவரிக்கு அனுப்பிப் பெறுவதன் மூலம் தானும் பயனடையலாம், நல்லதொரு தமிழ்த் தொண்டிற்கும் உதவலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--நன்றி......வசந்திமணாளன்..

எழுதியவர் : வசந்திமணாளன் (1-Aug-12, 10:52 am)
சேர்த்தது : vasanthimanaalan
பார்வை : 254

சிறந்த கட்டுரைகள்

மேலே