என்றடங்கும் அம்மா ?

என்றடங்கும் அம்மா ?
நீளமாய் இறுதி மூச்செடுத்து
நீ அடங்கிய நிமிடங்கள்
ஆழமாய் என் நெஞ்சில்
அறைந்து ஏற்படுத்திய அதிர்வலைகள்
என்றடங்கும்?
என்ன சொல்ல நினைத்திருப்பாய்?
எப்படித் தவித்திருப்பாய் ?
வலித்ததோ?
உன் கிளைகள் நாங்கள் சுற்றிநிற்க
உன்னை வேரறுத்துச் சென்ற
காலன் மேல் வருத்தமோ?
இப்படியாய் என்னைச் சுற்றிச்
சுழன்றடிக்கும் கேள்விகள்
என்றடங்கும் ?
மற்ற மரணங்கள் வாழ்வின்
நிகழ்வுகள் போல் கடந்து விட
உன் மரணம் மட்டும்
உணர்வெல்லாம் தேங்கி நின்று
பாலைச் சுடுமணலாய்
உன் மேனி தொட்ட நெருப்பாய்
என்னைத் தகிக்கிறதே -அது
என்றடங்கும்?
நில்லாமல் சுழலும் காலமும்,
விடாமல் துரத்தும் கடமைகளும் ,
வாழ்க்கையை இழுத்துச் செல்லத்தான்
செய்யும் -ஆயினும்
எனதாய் எக்கணமும் வாழ்ந்த
என் தாய் இருந்த இடம்
எது நிரப்பும் ?