கண்களை மூடிக்கொள்
"இங்க என்ன நடக்குது? நான் ஏன் இங்க உட்காந்திருக்கேன்? உண்மையிலயே நான் இங்க பார்க்கிறது தான் நடக்குதா?"- இப்படி மனசுக்குள்ள குதிர ரேஸ் மாதிரி ஒரு கேள்விய இன்னொரு கேள்வி மிஞ்ச, நான் எரியுற நெருப்பையே உத்து பார்த்துகிட்டு இருந்தேன்.
என்னைச் சுற்றி எல்லாரும் பரபரப்பா இருக்காங்க. அங்கயும் இங்கயுமா நடக்குறாங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசிக்கிறாங்க. எல்லாருமே நல்ல துணி போட்டிருந்தாங்க. யாருமே கவலையா இல்லையே. ஆனா நான் மட்டும் ஏன்?
இன்னைக்கு அவ கல்யாணம்! இதுதான் அவ கல்யாணம்!! நாதஸ்வரமும், மேளமும் வாசிக்கிறாங்க. இந்த இடம் முழுவதுமே சிரிப்பும் சந்தோஷமுமா இருக்கு. ஆனா எதுவுமே என் காதுல விழவில்லை.
நானும் அவளும் பார்க், பீச், பைக்குனு சுத்தினதில்ல. எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் தெரியும். பார்த்திருக்கிறோம்; பழகியிருக்கிறோம். நான் அவளத் தான் காதலிக்கிறேன்-னு என்னை விட அவளுக்குத் தான் நல்லா தெரியும். எனக்கு தான் எதுவுமே தெரியல.
ரொம்ப நாள் நான் அவள் கூட கற்பனையிலேயே வாழ்ந்துட்டேன். நிஜத்துக்கு வரனும்-னு முடிவு பண்ணி, அவள்கிட்ட என் காதலைச் சொன்னேன். மெளனமா தான் இருந்தாள். இந்த மெளனத்துக்குச் சம்மதம்-னு அர்த்தமில்லை. இந்த மெளனத்துக்கு எத்தனை அர்த்தம் இருக்குனு தெரியல.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அவ இன்னொருத்தனோட மனைவியா? எனக்கில்லையா? இல்ல. ஏதாவது நடந்து இந்த கல்யாணம் நின்னுடும். அவளுக்குக் கொஞ்சம் கூடவா என்மேல காதல் இல்லாம போச்சு. கண்டிப்பா இருக்கும். அவளே கூட இந்த கல்யாணத்த நிறுத்திடுவா"- எனக்குள்ள நானே.
"பைத்தியமா நீ. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அவள் உனக்கில்ல. அவள் சம்மதம் இல்லாமையா கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு. கற்பனைய விட்டுட்டு நிஜ உலகத்துக்கு வாடா"- எனக்குள்ள இருக்கிற எனக்கே பிடிக்காத நான்.
மாப்பிளைய அழைச்சிட்டு வந்து அக்னி முன்னாடி உக்கார வச்சாங்க.
"என்னை விட அவன் அழகா? இல்ல. சோளக்காட்டுப் பொம்மைக்கு வேஷ்டி கட்டின மாதிரி இருக்கான்" - சூழ்நிலை நான்
"அவனுக்கு என்னடா குறைச்சல், உன்னவிட நல்ல கலர். நல்ல உயரம். Raymonds விளம்பரத்துக்கு வர model மாதிரியே இருக்கான். உன்ன விட அழகு தான்"- சூழ்நிலையற்ற உண்மையான நான்.
"நான் வேணும்னா மாப்பிள்ளை கிட்ட போய் ஏதாவது சொல்லி கல்யாணத்த நிறுத்திடவா. இல்ல அவகிட்டயே மறுபடியும் போய் என் காதலைச் சொல்லவா. இல்லனா அவளோட அப்பா அம்மா கிட்ட ஏதாவது...."- இப்படி மனசுக்குள்ள தான் பெரிய போராட்டம். ஆனா வெளியில் எதுக்கும் தைரியமில்லாத ஒரு தண்டம்.
"பொண்ண அழைச்சிட்டு வாங்கோ"- ஐயர் சொன்னார்.
"போ...போ...போ... நீ தாலிகட்டி போ...போ...போ...போ...நான் வாழாவெட்டி போ..." அருகில் இருந்தவனின் அலைபேசி அழைத்தது. நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன். ஏன்னு தெரியல.
"யாருண்ண நீங்க?" - நான்
"ஜோசியக்காரன்"-அவன்.
அவள மணமேடைக்கு அழைச்சிட்டு வந்தாங்க. ரொம்ப நிறைய நகையெல்லாம் போட்டுக்கவில்லை. ஆனா அந்த நீலக்கலர் பட்டுப்புடவைல அப்டி இருந்தாள். அவள பார்க்கும் போது, எல்லாமே மறந்து "நான் தான் மாப்பிளை"-னு தோணுச்சு.
பூமிய பாத்துகிட்டு வந்தவ, ஏனோ தெரியல, கூட்டத்துல எதயோ தேடினாள். தேடிய கண்கள் என்னைப் பார்த்தது.
"இப்ப எதுக்குடி என்னைப் பார்க்கிற?" - கேட்கணும்-னு தோணிச்சு. கேட்கவில்லை.
மணமேடையில மாப்பிள்ளை பக்கத்துல போய் உட்காந்திட்டா. "ஐயோ! என்ன நடக்குது? அவள் என்ன பண்றா? எனக்கு எதுவுமே புரியலையே. இது எல்லாம் பொய். எல்லாமே காலையில வர ஒரு கெட்ட கனவு. முழிச்சுடுடா. எல்லாமே சரியாகிடும். நான் தூக்கத்துல இருக்கேன். இது எல்லாமே ஒரு கனவு தான். இத நான் நம்பியாகணும்". - நான் என் கண்களை இறுக மூடிக் கொண்டேன். எல்லாம் இருண்டது.
"கெட்டி மேளம்.... கெட்டி மேளம்..."