நிறுத்தக் குறிகள்

நாம் அனைவரும் பள்ளிப் பருவத்திலிருந்து பாடங்களைத் தமிழில் படித்தும் எழுதியும் வந்திருக்கிறோம். தமிழ் வழிப் பாடத் திட்டத்தில்தான் பெரும்பாலோர் படித்திருக்கிறோம். பல சமயங்களில் நண்பர்களுக்கும், உறவினர்க்கும், சில சமயங்களில் காதலர்க்கும் கடிதங்கள் தமிழில் எழுதியிருக்கிறோம். ஆனாலும் எத்தனை பேர் எழுத்துப் பிழையுமின்றி, இலக்கணப் பிழையுமின்றி எழுதியிருக்கிறோம்?

நான் சென்ற ஓராண்டாக 'கீற்று' வலைத் தளத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்; 'எழுத்து' வலைத் தளத்தில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகிறேன். நிறைய இடங்களில் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, வினாக்குறி, உணர்ச்சிக்குறி, மேற்கோட்குறி என்று இட்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் சரிதானா? குறிகள் இடுவதற்கான வழிமுறைகள் என்ன? இலக்கணம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.

வாக்கியங்களை அமைத்து எழுதும்போது, நிறுத்த வேண்டிய இடங்களில், சில குறிகளை (அடையாளங்களை) இட்டு எழுதுகிறோம். அப்போதுதான் படிப்பவர்கள், நிறுத்த வேண்டிய இடங்களில், நிறுத்த வேண்டிய அளவுக்கு, குறிகளால் தெரிந்து கொண்டு, நிறுத்திப் படிப்பார்கள். இவ்வாறு, பொருள் எளிதில் விளங்குமாறு, எந்த எந்த இடங்களில் எந்த எந்த அளவு நிறுத்திப் படிக்க வேண்டும் என அறிவிக்கும் குறிகளே 'நிறுத்தக் குறிகள்' எனப்படும்.

1. முற்றுப்புள்ளி (.)

உதாரணம் 1: நான் நாளை இசை நிகழ்ச்சிக்கு வருவேன். இது ஒரு முடிந்த வாக்கியம் ஆகும்.

உதாரணம் 2: திரு.வ.க.கன்னியப்பன், கண் மருத்துவப் பேராசிரியர் (பணி நிறைவு), மதுரை.

இதில் திரு, வ, க, என்ற இடத்திலும், முகவரியின் முடிவிலும் முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. எனவே, வாக்கியங்கள் முடிந்தவுடனும், சொற்களின் குறுக்கங்களுக்குப் பிறகும், முகவரியின் முடிவிலும், முற்றுப்புள்ளிகள் இடவேண்டும். அவ்விடங்களில் நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.

(ஒரு மாத்திரை நேரம் = ஒரு முறை இயல்பாகக் கண் இமைக்கும் நேரம் அல்லது கைவிரல் சொடுக்கும் நேரம்)

2. அரைப்புள்ளி (;)

உதாரணம் 1: கன்னியப்பனார் உண்மையே பேசுவார்; கவிதைகள் எழுதுவார்; கச்சேரிக்கும் போவார்.

இது ஒரு தொடர் வாக்கியம். கன்னியப்பனார் என்ற எழுவாய்க்கு மூன்று பயனிலைகள் வருகின்றன. ஒவ்வொரு பயனிலைக்கும் பிறகு அரைப்புள்ளி வருகிறது.

உதாரணம் 2: கன்னியப்பனார் கச்சேரிக்கும் போவார்; பாட்டுக்கள் பாடமாட்டார்.

இதில் உடன்பாடும் எதிர்மறையுமான இரண்டு வாக்கியங்கள் தொடர்ந்து வரும்போதும் அரைப்புள்ளி வந்திருக்கிறது.

எனவே ஒரே எழுவாய், பல பயனிலைகள் கொண்டு முடியும் போது வாக்கியத்தின் இடையில், ஒவ்வொரு பயனிலைக்குப் பிறகும், மாறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்து ஒரு வாக்கியத்தில் வரும்போதும் அரைப்புள்ளி இடவேண்டும். இந்த இடங்களில் இரண்டு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.

3. காற்புள்ளி (,)

உதாரணங்கள்:

மெய், வாய், கண், மூக்கு, செவி – பொருள்களை எண்ணல்.
அலைந்து, திரிந்து, களைத்து – வினையெச்சம்.
அக்கா, வா, விளையாடப் போகலாம் – விளித்தல்.
வெகுநேரம் உறங்காமல் இருந்தால், உடல் நலம் கெடும் – எச்சச் சொற்றொடர்.

பொருள்களை எண்ணும்போதும், வினையெச்சங்களின் பின்னும், விளிக்கும்போதும், எச்சச் சொற்றொடர் வரும்போதும், காற்புள்ளி இடவேண்டும். இங்கு ஒரு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும்.

4. வினாக்குறி (?)

உதாரணம்: இன்று தேர்வு இருக்கிறதா?
அகல் விளக்கு புதினம் எழுதியவர் யார்?

வினாக்களுக்குப் பிறகு இடப்படும் குறி வினாக்குறியாகும். இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்தலாம்.

5. உணர்ச்சிக்குறி (!)

எப்படி நீ கம்பத்தின் மேல் ஏறினாய்! - வியப்பு
அய்யோ பரிதாபம்! – இரக்கம்
பாம்பு! பாம்பு! - அச்சம்
பணம் தொலைந்து போனதே! - அழுகை
தம்பி! அங்கே பார். - விளித்தல்
உன்னை ஒருகை பார்க்காமல் விடமாட்டேன்! – சினம்

வியப்பு, இரக்கம், அச்சம், அழுகை, விளித்தல், சினம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுவதை விளக்கும் சொற்களுக்குப் பிறகு உணர்ச்சிக்குறி இடப்படும். இங்கும் நான்கு மாத்திரை நேரம் நிறுத்தலாம்.

6. (இரட்டை) மேற்கோட்குறி (”....”)

”அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”

என்று அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். ஒருவர் சொல்லியதை அப்படியே மேற்கோளாக எடுத்துக் காட்டும்போது முன்னும் பின்னும் இரட்டை மேற்கோட்குறிகள் இடவேண்டும்.

நிறுத்தக் குறிகள் பற்றிய இந்த எளிய கட்டுரை இத்தளத்தில் உள்ள என் இனிய நண்பர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன். இது எங்களுக்குத் தெரியாதா! என்று எண்ணுபவர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

ஆதாரம்: புலவர்.ச.ஆறுமுக முதலியார் எம்.ஏ.,பி.ஓ.எல்.,எல்.டி., அவர்கள் எழுதி, 1960 ல் வெளியிட்ட ’செந்தமிழ் இலக்கணமும், கட்டுரையும்’ புத்தகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-12, 1:05 pm)
பார்வை : 3886

மேலே