கற்பதற்கு ஏற்ற நேரம்...

கற்பதற்கு ஏற்ற நேரம்:

காலைக் கல்; மாலைப் புல்!

"காலைக் கல்; மாலைப் புல்' என்று ஒரு பழமொழி உண்டு. "காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்' என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர்.


காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி.


"மாலைப் புல்' என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து.


ஆசிரியரிடம் பாடம் கேட்கும் மாணாக்கர் ஒருமுறைக்கு இருமுறை பாடம் கேட்பது மிகச் சிறந்தது. ஒரு முறைக்கு மூன்று முறை பாடம் கேட்டால், ஆசிரியரைப் போலவே மற்றவர்களுக்கு அப்பாடத்தைக் கற்பிக்க முடியும். தமிழ் இலக்கண நூலாகிய நன்னூலில் இதைப் பற்றி,

""ஒருமுறை கேட்போன் இருபால் கேட்பின்

பெருக நூலில் பிழைபாடு இலனே''

""முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்''

என்ற நூற்பாக்கள் கூறுகின்றன.


மாணாக்கர்கள் எவ்வளவு கவனமாக ஆசிரியர் கூறுவதை, சித்திரப்பாவைபோல அமர்ந்து கேட்டாலும், கால் பகுதிதான் மனதில் பதியும். தன்னோடு பாடம் கற்ற மாணவர்களுடன் படித்த பாடத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதால், மற்றொரு கால்பகுதி மனதில் பதியும்; தான் படித்த பாடத்தை மற்றவர்களுக்கு விளக்குவதால், இன்னொரு அரைப்பகுதி முழுமையாகிப் பாடம் கற்ற பலன் கிடைக்கும் என்று நன்னூலாசிரியர் பவணந்தி கூறியுள்ளார்.


""ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்

கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்''


""அவ்வினை யாளரொடு பயில்வகை ஒரு கால்

செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்

மாசறு புலமை மாண்புடைத் தாகும்''

என்பன நன்னூல் நூற்பாக்கள்.


"அல்லவை நீக்கி நல்லவை கற்க வேண்டும்; வேண்டாதவற்றை நீக்கி, வேண்டியவற்றைப் படிக்க வேண்டும்' என்பதைப் பற்றி நாலடியார்,

""கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெளிந்து''

(குருகு-அன்னப்பறவை)

என்ற வெண்பாவில் கூறுகிறது.


திருக்குறளில், "கற்பவை கற்க' என்று கூறப்பெறுவதும் இக்கருத்துப் பற்றியே!



செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ. சத்யாசெந்தில், (5-Aug-12, 6:47 pm)
பார்வை : 1490

மேலே