ரணத்தின் ரணமாய்
வலிகளை வழக்கமாய் புதைக்க தெரிந்தெமக்கு
இலகுவாய் இருக்கிறது
சித்ரவதைகளை எதிர்கொள்ள !
முகத்தில் சிரித்தபடி
அகத்தில் அழுதபடி
பிணத்தில் ஒரு நடை பிணமாய்
நடந்த படி போகிறது எம் வாழ்வு !
எந்த துயரிலும்
கலங்காமல்
கல்லைப் போல இருக்கிறார்கள் சிலர் !
இடப்பெயர்வு பொதிகளை இறக்கிவைத்து
காயங்களை எமதோடு
சேர்த்து,
முட்கம்பிக்குள் முழுமையாய் சரணாகதி அடைந்தபடி ....
எங்கள் வீட்டில் மூத்திரம் போகவே
அடையாளப் பத்திரம்
காட்ட வேண்டியதாய் தொடர்கிறது
எங்கள் மூத்திர வாழ்வு !
ரணத்தின் ரணமாய்,
கணம் கணமாய்,
துடி துடித்து சாகிறது
அவரவர் மானம் !
துப்பாக்கி கண்களால்
குரிபார்க்கப்படுகிறது -தமிழ்த்
தையல்களின் குறிகள் !
இதை சொல்லியழுதாலும் இயலாமையாய்
போய்விடுமென
மென்று
கூட்டி விழுங்கிய படி நான் !
தாகம் தணிக்க
காலம் பார்த்தபடி
ஒரு கடிகார முள்ளாய்
நானும் முட்கம்பிக்குள்!
எங்கள் கனவில்
மீண்டும் பூக்கள்...
முட்கம்பிகளுக்கு இடமில்லை!
செண்பகப் பறவை ஒன்று
சேதி சொல்கிறது
எனது கவிதையிலிருந்து!
எழுக தோழா !
எழுக,
இல்லையேல் விழுவாய் நாயே!
விழுவாய்
எதிரி காலை நக்கி தொழுவாய்!