மீண்டு(ம்) வருவாள்
இன்றோடு அவளைப் பார்த்து ஒரு வாரமாகின்றது. அவள் முகம் இன்னும் என் மனதில் அழியாமல் உயிர் வாழ்கின்றது. எப்போதும் கருணையே குடிகொண்டிருக்கும் இரு கண்கள். யாரைக் கண்டாலும் புன்னகை புரியும் உதடுகள். தங்கத்தையே விஞ்சி நிற்கும் நிறம். அவள் வாய்விட்டு சிரித்தால், எம் உடலில் நோய் விட்டுப்போகும். கவலைகள் மனதிற்குள்ளேயே சமாதியடையும் அவள் உடல் மட்டுமல்ல, உள்ளமும் பூ போன்று மென்மையானது. வாசமானதும் கூட. பார்வதி என்ற பெயரிற்கேற்றாற்போல் அவள் அழகினாலும், அன்பினாலும் பாருக்கே தலைவியானவள்போல் தோன்றும். ஐந்து வயது கூட நிரம்பாதவளாயினும் சான்றோருக்கான பணிவைக்கொண்டிருப்பாள். தத்தித் தத்தி நடக்கும்போது காற்சங்கிலியும், கை வளையல்களும் எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் செலுத்துவதற்கு ஓசை எழுப்பும். எதிர் வீட்டுக்காரி என்றாலும் என் வீட்டிலேயே அதிக நேரம் தங்கியிருப்பாள். அவள் விளையாடிய பொம்மைகளுடன் செந்தமிழையும் விட இனிமையான அவளின் மழலை மொழியின் எதிரொலியுடன் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன்.
நாற்பது வருடகாலம் அஞ்சல் நிலையத்தில் வேலை செய்தேன். சேவை நிறைவு பெற்றதும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இரண்டரை மாதங்களுக்கு முன்புதான் இவ்வீட்டிற்கு வாடகைக்குடியிருப்பாளனாக வந்து சேர்ந்தேன். என் குடியில் தற்போது நான் மட்டுந்தான் அங்கத்தவன். என்னை காதலனாக ஏற்று கணவனாக அடைந்து, குழந்தையாக பாதுகாத்தவள் திருமணமாகி சில வருடங்களிலேயே எனக்கு தபுதாரன் பட்டம் வழங்கி என்னுலகம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டாள். நான் பெயர் வைக்கவும், என் பெயர் சொல்லவும் வாரிசுகள் இல்லை. பல கடித உறைகளில் முத்திரைகள் குத்திய எனக்கு என் வாழ்வில் முத்திரை பதிப்பதற்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. உறவுகள் என்னோடு உறவாடவுமில்லை, அதனால் என் மனம் வாடவுமில்லை. நிம்மதியை தேடிய மனது வேலையில் மூழ்கியது. காலங்கள் ஓடின. வயது வேலையை நிறுத்தியது, மனது சோகத்தில் உருகியது.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (திருக்குறள் 623)
என்பதற்கிணங்க மனமாற்றத்திற்காக இடமாற்றம் செய்தேன். ஊர்விட்டு ஊர் வந்து இவ்வீட்டினுள் புகுந்து கொண்டேன். என் வீட்டிற்கு வந்த முதல் விருந்தாளி பார்வதிதான். “தாத்தா…… பந்து……” என மழலை மழை பொழிந்துகொண்டே உள்ளே வந்தாள். எதிர் வீட்டு வாசலில் பந்து விளையாடும்போது அப்பந்து என் வீட்டிற்குள் உருண்டோடி வந்து அவளை இங்கு வரச்செய்துள்ளது. பார்த்தவுடனேயே மயங்கச் செய்யும் வசீகரமான குட்டி தேவதை அவள். அவளைக் கண்டதுமே மனப்பாரங்கள் குறைந்ததுபோல் ஓர் எண்ணம். பந்தை எடுத்துக்கொண்டு ஓடினாள். காற்றடைத்த விளையாட்டுப்பந்து அவளுடைய சிறிய கைகளிலிருந்து நழுவிக்கொண்டே இருந்தது. காற்றடைத்த இந்த மனிதப்பந்து (நான்) அவளுடைய விளையாட்டில் இலயித்திருந்தது.
ஓரிரு நாட்களிலேயே பார்வதி என்னோடு நன்றாகப்பழக ஆரம்பித்தாள். அவளுடைய பொம்மைகள் எல்லாம் என் வீட்டிற்கு வந்தன. அவளுடைய பெற்றோர்களும் என்னோடு அன்பாகப் பழகினர். தனிமரம் தோப்பாகியது. என் வாழ்க்கையில் நான் நீண்ட நேரம் விளையாடிய குழந்தை அவளாகத்தான் இருக்கும். உப்பு மூட்டை, ஒளிந்து பிடித்து, பந்து எறிதல் போன்ற பல விளையாட்டுக்களை கற்றுத்தந்தாள். வீட்டில் இனிப்புப் பலகாரங்கள் செய்தால், எனக்குத்தான் முதலில் கொண்டோடி வருவாள். அவள் கொடுத்தால், வேப்பிலையும் கற்கண்டாக மாறும்.
இரண்டு மாதங்கள் கழிந்தன. பார்வதியின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. அவளுடைய உற்சாகம் குறைந்தது. ஒளி வீசும் கண்கள் மயங்கிப்போயின. அடிக்கடி நெஞ்சு வலியால் துடிப்பாள். வைத்தியரிடம் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு போனேன். வைத்தியர் நடத்திய பரீட்சைகள் முடிந்தன. இறைவன் நடத்தும் பரீட்சைகள் ஆரம்பமாகின. குழந்தையின் இதயத்தில் வால்வுகள் பலவீனமடைந்து இருப்பதாக வைத்தியர் சொன்னார். இதைக்கேட்டதும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. இதயத்தின் வால்வு அவளின் வாழ்வை முடித்துவிடுமோ எனப்பயந்தேன். வெளிநாடு சென்றால், சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என வைத்தியர் ஆலோசனை வழங்கினார். கதைகள் கூறி விளையாடும் போதும்கூட சோகமான கதைகள் கூறினால், அவள் கண்கள் அருவியாக மாறிவிடும். அவளை ஆனந்தப்படுத்துவதற்காக நகைச்சுவைக் கதைகளையே கூறுவேன். இராமனின் கதை கேட்டு அழுத இளகிய மனம் கொண்டவள். இன்று இராமனின் அம்பில் சிக்குண்ட தவளைபோலானாள்.
அவசர அவசரமாக வெளிநாடு செல்ல ஆயத்தஞ்செய்தனர். தெரிந்தவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் என பலரிடமிருந்தும் பணம் பெறப்பட்டது. உதவிகோரி பத்திரிகையிலும் படம் பிரசுரமாகியது. “தாத்தா என் படம் வந்திருக்கு” என மகிழ்ந்தாள். பாவம்! அது விதியின் விளையாட்டு என அவள் அறிந்திருக்கவில்லை. ஏற்பாடுகள் பூரணமாகின. பயண நாள் வந்தது. அன்று அவள் முகம் வாடியிருந்தது. சிரிப்பொலி நின்றிருந்தது. அதிக நேரம் என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டி வந்ததும் அவள் கண்கள் கலங்கின. “தாத்தா…… தாத்தா…..” என்றழுதாள். அழுத்தமாக பல முத்தங்கள், முத்திரைகள் மேல் விழும் சீல்கள் போல் என் கண்ணங்களில் வீழந்தன.
வண்டியில் ஏறி தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டாள். வண்டி புறப்பட்டது. என் கண்களில் அணைக்கட்டு உடைந்தது. வலது கையை ஆட்டிக்காட்டினாள். அதற்கு தாத்தா போய் வருகின்றேன்.” என்று அர்த்தமா? இல்லையென்றால், “தாத்தா நான் வராவிட்டாலும், என்னை மறந்து விடவேண்டாம்.” என்று அர்த்தமா என புரியாமல் குழம்பிப்போய் மெய்நிலை மறந்து நின்றேன். வாழ்க்கையை முடித்தவன் நானிருக்க, வாழ்க்கையை ஆரம்பிக்காத அந்த பிஞ்சு உயிர் மீது காலனுக்கு அப்படியென்ன ஆசை? சாவித்திரிபோல் எனக்கும் சக்தி இருந்தால்…… இல்லாமல் போய்விட்டதே! குழந்தைகளின் நல்வாழ்க்கைக்காக புரட்சி செய்த பாரதியாரின் கால்களால் மிதிப்பட்டிருந்தால் அவன் திருந்தியிருப்பான் போலும். பசித்தவனுக் கு உணவைக்கொடுத்து அவன் உண்டு இரசிக்கும் வேளையில் பாதியிலேயே பிடுங்கி எடுப்பதுபோல், பிள்ளையில்லாத எனக்கு குழந்தையின் அருமையைக் காட்டிவிட்டு பறித்து விடாதே ஆண்டவா!
இன்றோடு அவள் சென்று ஒரு வாரமாகின்றது. அவர்கள் நலமோடு போய் சேர்ந்த தகவல் கிடைத்தது. ஆனால் நலமான தகவல் இன்னும் செவிக்குள் நுழையவில்லை. என்னோடு சேர்ந்து நீங்களும் இறைவனிடம் மன்றாடினாள் நிச்சயமாக பார்வதி நோயின் வாயிலிருந்து மீண்டு வருவாள். என்னிடம் மீண்டும் வருவாள்.