நானுந்தான் தேடுகிறேன் !

ஆல மரத்தடி
அமைத்து தந்த மேடை!

குளத்துக் கரையில்
கூடிடும் மங்கையர் கூட்டம்!

வீட்டு முற்றத்தில்
இரை கொத்தும் சிட்டுக் குருவிகள்!

வீட்டு திண்ணையில்
ஊரை சுற்றும் பெருசுகள்..!

காற்று சுமந்து வரும்
கம்மாக் கரை குளிர்ந்த காற்று!

கழுத்து மணி அசைய
அம்மாவென்று குரல் கொடுக்கும்
கால்நடை செல்வங்கள்!

கூரை குடிசைக்குள்
சோளக் கதிர் சுடும் வாசனை!

வரப்பு படர்ந்த புல் வெளிகள்!

விளைந்து..
தலை வளைந்து..
நிற்கும் கதிர் மணிகள்!

சுவரோரம் சாத்தி வைக்கப் பட்டிருக்கும்
ஏர் கலப்பை!

குதிர் நிறைத்த
தானியங்கள்!

கதை கதையாய் சொல்லி வைத்த
என் கிராமத்தின் அடையாளத்தைக் காட்ட
மகனை அழைத்து சென்ற நான்..
என் மகனோடு சேர்ந்து,
நானுந்தான் தேடுகிறேன்
தொலைந்து போன அந்த அடையாளங்களை!

எழுதியவர் : ந. ஜெயபாலன்.திருநெல்வேலி ந (18-Aug-12, 6:33 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 178

மேலே