காணி நிலம் வேண்டும்...
காணி நிலம் வேண்டுமென்றான் பாரதி
கதியற்று கிடக்கின்றோம் யார் இனி?
ஓட ஓட விரட்டினர் பலதரம் - நாங்கள்
ஒலிம்பிக்குக்கு சென்றிருந்தால் முதலிடம்
ஒலிம்பிக் என்ன ஒலிம்பிக்?
தோள் தட்டிக் கொடுப்புகள்
கைதட்டி வாழ்த்தல்கள்
வெற்றிக்கு விளக்கஞ் சொல்லும்
வெடிகுண்டு வீச்சுகள்
பல்குழல் பீரங்கிகள்
வாழ்வுக்கே உலைவைக்கும்
பதக்கத்திற்கான ஓட்டம் அது
பதற்றத்துடனான
பதுங்குகுழிகளுக்கான ஓட்டம் இது
சிதறியது போக
சிதைந்தது போக
மிஞ்சிய உயிர்கள்
கஞ்சியாலும் குடித்து வாழ
காணி நிலம் வேண்டும்
விடுதலைக்கான தேடல்
பாரதியின் பாடல்
அடிப்படை வாழ்வொன்றுதான்
எங்களின் ஒரே ஆவல்.
இருப்பிடமில்லாமல் இகமென்றால்
திரிசங்குகளா நாங்கள்?
அடிப்படை வசதிகளில்லா வாழ்வென்றால்
மனிதர்களில்லையா நாங்கள்?
அன்று பயிர் வளர்த்தோம்
பசியாறினோம் - பின்
செல் சிதைத்த உடல்களை சிதையேற்றினோம் - இன்றோ
வேற்றுக்கிரக வாசிகளாய்
அந்நியமாக்கப்பட்டுள்ளோம்
ஆனாலும் செய்ததொன்றுமில்லை
சில தலைகளின்
அரசியல் சாணக்கியம்.
வற்றிப்பொன சிந்தனைகளும்
வரண்டுபோன மனிதநேயமும்
மாற்றுக்கருத்துக்களை ஏப்பமிட்டு
மனித தலைகளை மலிவாக்கிவிட்ட
காட்சிகள் மட்டுந்தான் மிச்சம்
இவர்களுக்கில்லையோ இறையச்சம்?
நடக்கவேண்டுமென்று இரு கால்கள்
துடிக்கவேண்டுமென்று ஓர் இதயம்
பார்க்கவேண்டுமென்று இரு கண்கள்
சிந்திக்கவென்று ஓர் உள்ளம்
இவை மட்டுமே தமிழன் வெகுமானம் - ஆனாலும்
தாழவில்லை அவன் தன்மானம்.
படர்ந்து வந்த தேமலாய்
தொடர்ந்து வந்த சோகங்கள்
ஆள்விழுங்கும் பூதங்களாகி
பறிக்கப்பட்ட உரிமைகளுடன்
ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள்
அகதிகளாய் சிறையிட்டது.
பசித்தவனுக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழிப்போம்
நெஞ்சு நிமிர்த்தி
திமிரோடுரைத்தான் - பாரதி
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்
வாழ வழி வேண்டாம்
வாழ்ந்த நிலம் போதும்
பழுதுண்டு சாகாமல்
உழுதுண்டு வாழ்ந்து காட்ட...