அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி

-----அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி----

கடிதத்தின் இறுதி மூச்சை
இறுக்கி பிடித்திருக்கும்
இலக்கிய பெருமக்களே..

பகத்சிங் கொணர்ந்த
பாரத பற்றே...

கொஞ்சல் மொழி தடவி
அஞ்சல் துறையின்
ஆயுள் வளர்த்த
கடந்த நூற்றாண்டு
காதலர்களே...

தபால் தாத்த இழவுக்கு
காத்திருக்கும்
இணைய தளங்களே...
இளைய தலைகளே....

கவலை வேண்டாம்
கண்ணீர் துடைத்து கொள்ளுங்கள்...
கடிதத்திற்கு சாவு இல்லை
அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி

இலங்கை கடற்படையின்
கடைசி தோட்ட
காலியாகும் வரை
தமிழக அரசு
கடிதத்தை கைவிடாது...

பாரத அரசு
நம் கடிதங்களை
படிப்பதுமில்லை.
பரிசீலிப்பது போல
நடிப்பதுமில்லை...

விவசாயிகள் விஷமருந்தி
விழிகளெல்லாம் வரண்டு
சிறுநீரக பை சுருண்டு
தொண்டைக்கும் நாவுக்கும்
மத்தியில்
கடைசி துளி எச்சில்
உலர்ந்து நாம் மடியும் வரை
குடிநீர் விண்ணப்பம் கேட்டு
குனிந்து நிற்கும்
தமிழ் கடிதங்கள்...

கருணையுள்ள இலங்கை
கடற்படையோ...
மீன்களை மீண்டும்
கடலில் விட்டுவிடுகிறது...
ஏனோ
சிகரெட்டு கங்குகளால்
மீனவர் உடலை சுட்டுவிடுகிறது..

உடன்பிறந்தவன்
உதைபடுகிறான்
உன்னிடம் எஞ்சியிருக்கும்
கூறிய பேனா முனையால்
அவன் குதிங்காலை
குத்தி கிழித்திடாமல்
கும்பிடு போட்டு
எழுதப்பா எழுது
இந்த
குருட்டு பயலுகளுக்கு
குட்டி கடிதம்...

மீனவ பிணங்களையேனும்
மீட்க கோரி....
கட்ச தீவைப் போல
மிச்ச தீவையும்
பிச்சையிடுவதாய் எண்ணி
தற்குறி இந்திய அரசு
தவறுதலாய்
தமிழகத்தை
தரைவார்த்திடாமல் இருக்க
எழுதப்பா எழுது
எதற்கும் ஒரு கடிதம்....


---- தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (24-Aug-12, 3:52 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 391

மேலே