மகா கவிக்கு சமர்ப்பணம் ( 5000 மாவது கவிதை )

கொஞ்சம் கொடு உன்
நெஞ்சின் வீரம்
அஞ்சி சாவது விடுத்து
அகிலத்தை வெல்லுகிறேன்.....!
தன்னம்பிக்கை புலவனே...
தமிழ்நாட்டுக் கவிஞனே....
தமிழறிவு எனக்குக் கொடு....
தமிழ் கவிகள் படைத்திடவே ...!
முண்டாசுத் தலப்பாவில்.....
முடிந்துகொடு வானத்தை - உன்
முறுக்கு மீசையாலே
முட்டிப் பிளந்து எடு பூமியை.......!
தமிழினை சுவாசக் காற்றாய்
தரணி எங்கும் பறக்க வைக்கிறேன்
தமிழ் பூக்கள் மண்ணில் வளர
தர கவிதை நான் விதைக்கிறேன்.....!
அகண்ட விழியின் தீர்க்கம்
அய்யனே எனக்குக் கொடு
அழகு எதிர்கால உலகில்
அருமைத் தமிழை சிரிக்க வைக்கிறேன்....!
காக்கை குருவி எமது ஜாதி என்றாய் - நல்ல
கவிதைகளாலே எமது நெஞ்சில் நின்றாய்
கன்னித் தமிழ் பயின்ற கருத்துடை கவிஞனே
காணிக்கையாக்குகிறேன்
எனது ஐந்தாயிரமாவது கவிதையை உனக்கு...!