கனாக் கண்டேன் தோழி
கூவம் நதியில் தோணி ஓட்டக்கண்டேன்
கரை நெடுக பூங்கா கட்டக் கண்டேன்.
கனாக் கண்டேன் தோழி
கனாக் கண்டேன்.
நதிகள் எல்லாம் தேசியமயமாகக் கண்டேன் – எல்லா
நதிகளும் ஒருசேர இணைக்க கண்டேன்.
காவிரியில் கங்கை கலக்க கண்டேன்.- அந்த
முல்லைப் பெரியாறில் மலையாளமும் தமிழும் கொஞ்சக் கண்டேன்.
அடைமழை பெய்தபோதும் சாலையில் சொட்டு நீரில்லை
ஆனாலும் அது கடலுக்கும் செல்லவில்லை.
ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு மையம் வைத்தார்- மழைநீர்
முழுதும் அதில் தேக்கி வைத்தார்.
கனாக் கண்டேன் தோழி
கனாக் கண்டேன்.
.
அத்தனைக் கழகங்களும் ஒருகழகம் ஆகக் கண்டேன்
அடிதடி போட்டி பொறாமை அறவே போகக் கண்டேன்.
ஊழல் முழுமையாய் ஒழியக் கண்டேன்.- மீறி
செய்பவர் தூக்கில் தொங்க கண்டேன்.
தண்ணீர் பஞ்சம் இல்லா நாட்டை கண்டேன்
மின்வெட்டுக்கே மின்வெட்டு வந்த நாளைக் கண்டேன்.
படித்தவர் அனைவருக்கும் வேலை கண்டேன்
பேரரசாய் இந்தியா தலைதூக்க, பெருமிதம் கொண்டேன்.
கனவா நனவா
இது பொய்யல்ல நிஜம்
கனாக் கண்டேன் தோழி-
கனாக் கண்டேன்.
கூவம் நதியில் தோணி ஓட்டக்கண்டேன்
கரை நெடுக பூங்கா கட்டக் கண்டேன்.
சுசீந்திரன்.