நான் ஒரு மலடி - கே.எஸ்.கலை
சாமி போட்ட தப்பு கணக்கு
பலிச்சி போச்சி பாவி எனக்கு
தாலி கட்டி வந்த புள்ள -
தூளி கட்ட வாய்க்கவில்ல !
வேண்டாத சாமியொன்னும்
இல்ல இந்த ஒலகத்துல – நா
படும் பாட்ட எந்த பொண்ணும்
படக் கூடா பூமியில !
புள்ள வரம் குடுக்காம
சாமி என்ன தண்டிக்குது
மெது மெதுவா எந்த நாளும்
ஏ உசுரு துடிக்குது !
பக்கத்து வீட்டுக்காரி
காய போட்ட புள்ளத் துணி
பாவி இவ வாழ்கையவே
காயப் படுத்தி போகுதுங்க !
அடுத்த வீட்டு ஆட்டுக் குட்டி
“அம்மா””னு கத்துறப்ப
ஆண்டவன குத்தம் சொல்லி
அழுகுறேங்க எந்த நாளும் !
இடது வீட்டு சொந்தக்காரி
வலது வீட்டு கூட்டாளிக்கு
அழைப்பு வைக்க போறாங்க – என்ன
அறிஞ்சும் அறியாம போறாங்க !
அம்மி மிதிச்சி அருந்ததி பாத்து
கட்டிக்கிட்ட புருஷன் கூட
வயித்துல எத்தி அடிக்குறாங்க
அடி வயிறு வலிக்குதுங்க !
தண்ணி போட்டு அடிச்சிருந்தா
தாங்கிக் கிட்டு இருந்திருப்பே
தண்டனன்னு அடிக்குறான்ங்க
தாங்கிக்கிற முடியலங்க !
கூட்டாளி வாங்கி தந்த -கரடி
பொம்மைக்கு உசுரிருந்தா
கத்தி கதறி சொல்லுமுங்க – நா
கட்டிலுல கதறும் கத !
•
பொண்ணு புள்ள பொறந்ததால
குப்ப குழி தேடுறிங்க
விலாசம் மட்டும் தந்துருங்க
உங்க வீடு தேடி வாறேங்க !
தப்பு பண்ணி பெத்ததால
கழுத்து நெறிச்சி கொல்லாதிங்க
தயவுசெஞ்சி கொண்டு வாங்க
தாராளமா ஏத்துக்கிறே !
பெத்தெடுத்து வளக்க நானும்
கொடுத்து வைக்க இல்லீங்க
தத்தெடுத்து வளக்க போறேன்
தயவு செஞ்சி தடுக்காதிங்க !