எதையெல்லாம் இழந்தோமோ அதுவெல்லாம் மீட்கவேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னூரில் நான் இல்லாமலிருந்து
இன்று எவ்வளவு
நாளாகிவிட்டது!
கிணற்று தண்ணியில் உடல் குளித்து
உளம் கொள்ளும் சந்தோசம்,
உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்துவிட்டது!
முற்றத்து செவ்வரத்தையில்
முகம் பார்த்து,
நான் பூத்து எத்தனை நாள் ஆச்சு !
சுற்றம் கூடியிருந்து பனங்கட்டி கடித்து
பின்நேரம் ஒரு தேத்தண்ணீர்
குடிக்க ,
இனியெப்போது நாள் வருமோ ?
சாமியாரின் வைரவர் கோவிலில்
புக்கை வாங்க
பூவரசம் இலையோடு,
பூசாரி மணியண்ணாவின்
வருகைக்கு முன்னரே
காத்திருக்கும் தவமினி எப்போதோ?
இரட்டைக்கேணி அம்மளாச்சியின்
கோவில் மணி ஓசையையும்,
சாவகச்சேரி கலையமூர்த்தியின் நாதஸ்வர இசையும்,
கேட்டு மனதினில் ஆனந்தம்
பிறக்க இனியேதும் நாளுண்டோ ?
பளைப் பள்ளிக்கூட
குணம் வாத்தியார்
கையாலே,
குழப்படியெதும் செய்து
பிரம்படி வாங்கி
இரண்டு நாள் மட்டும் திருந்திவிட்டேன்,
எனச் சொல்லி
நடிக்கும் பாக்கியம் இனி வருமோ!
செந்தில்நகர் தெருக்களிலே
கிழிஞ்ச காற்சட்டையுடன்
பொன்வண்டு பிடிக்கவும்,
குளம்சென்று குளிக்கவும்,
பனம்பழம் தின்னவும்,
இனியெங்கே கிடைக்கும் இந்த சுகம் ?
பளை நகரின் (பா)வாசத்தை உணர்வது இனி எக்காலம் ?
பள்ளிக் கூடவுடையில் பிள்ளைகள்
போகும் போது
தெருவில் பருவமலையும் பார்வைகள் எத்தனை !
இனியெப்போ கண் வந்து சேரும் இவைகள் ?
தமிழா!
பெற்ற மண்ணில் வாழக் கிடைக்காவிடின்
செத்துப் போதலே நன்றென ,
கோபத்தில் சொல்லவில்லை
தாகத்தில் சொல்லுகிறேன் !
நெருப்பில் போட்டெரித்தாலும் நினைவுகள்
எரிவதாயில்லை,
நெடு நாள் சாம்பலாகுவது நான் மட்டும்!
அம்மளாச்சி தாயே!
கயவரினத்தை அடியோடு விரட்டு நீ
எம் மண்ணை விட்டு,
உன்னூரிலும் காக்கை வன்னியன்கள்
பிறக்கிறார்களாம்,
அவர் பரம்பரையே அழித்து விடு.
இல்லையேல்
உன் புனிதம் கெட்டு போகும்!
எம் மண்ணை விட்டு அரக்கரினத்தை
அடியோடு அடித்து அனுப்பு
அடுத்த,
திருவிழாவிற்கேனும் வருகிறேன்!
இப்போதெப்படி
பேய்களிருக்கும் எம்மூருக்கு உன் சேய் வருவது?
பறிகொடுக்கப்பட்ட எனது இனிமைகளையும்
என்னூர் வளங்களையும்,
எப்போது மீட்பேன் ?
எப்படியும் மீட்க வேண்டும்,
உயிர் கொடுத்து தான் மீள வேண்டும்.
எனது ஊர்,
எனது வாழ்வு,
எதையெல்லாம் இழந்தோமோ
அதுவெல்லாம் மீட்கவேண்டும்.