நான் ஒரு வட இந்தியன்

தமிழ்நாடு நல்ல ஊர்தான்....

நான் தொழிற்சாலையில் நுழையும்போதெல்லாம்
என் கண்காணிப்பாளர் என்னை பார்த்து சாப்பிட்டாயா என்று
இந்தியில் வினவும்போதெல்லாம் பரிவோடு கேற்கிறார் என்றெண்ணினேன்!
ஆனால் அதை அவர் ஒரு பெண்ணிடம் எப்படி என் இந்தி என்று கூறி
தன்னை தானே புகழ்ந்த போதுதான்
மீனை பிடிக்க உபயோகித்த புழு நான் என்பதை உணர்ந்தேன்!

நான் பேருந்தில் ஏறி நான் போக நினைக்கும் ஊரை கஷ்டப்பட்டு சொல்ல முயல்வேன்
எனக்கு தமிழ் தெரியாதல்லவா. .. ஆனால் கடைசி எழுத்தை சொல்லும் முன்பே
நடத்துனர் என்னை நடையை கட்டு அங்கெல்லாம் போகாது என்பார் ....
நான் நினைத்த இடத்துக்கு போகமுடியவில்லையே என்ற கஷ்டத்தை விட
அவர் என்னை பார்க்கும் பார்வை தான் என் நெஞ்சை கள்ளிச் செடியால் உரசியதுபோல் இருக்கும் !

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படம் பார்த்தேன் . அதில்
கேயாஸ் தியரி என்று ஏதோ சொல்வார்கள் அது உண்மை தான் போலும் !
எங்கோ ஒரு வட இந்தியன் திருடி விட்டானாம் ! ஆனால் இங்கே என் பல் உடைந்தது
ஏட்டு உதைத்த உதையின் காரணமாக! ஆனால் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி
தான்! அன்று இன்ஸ்பெக்டர் விடுமுறையாம் ! அன்றைக்கு முந்தைய நாள் என் நண்பனுக்கு இன்ஸ்பெக்டர்
உதைத்ததால் நான்கு பற்கள் போய்விட்டது! அதில் இரண்டு, முன் பற்கள். எனக்கு
கடவாய் பல்தான் போனது. வாழ்க ஏட்டு !

ஒரு பிரபல தமிழ் நடிகரின் படத்திற்கு
நானும் என் நண்பனும் சென்றிருந்தோம்
படம் சுமாராகத்தான் இருந்தது. கதாநாயகன் மன்னிக்கவும் கதாநாயகர் ஒரு கட்டத்தில் அழுவார்
படத்தை நங்கள் சரியாக கவனிக்கவில்லை
அப்போது நான் சொன்ன ஒரு நகைச்சுவைக்கு என் நண்பன் சிரித்துவிட்டான்!
சிரித்தவனின் உதடுகளில் பதினாறு தையல் போட்டோம் .
காரணம் அந்த நடிகரின் விசிறிகள்.
மேலும் எங்களுக்கு தமிழ் விரோதிகள் என்ற பட்டம்!

இப்போது இதை உங்களிடம் சொல்லும்போது கூட என் கண்ணம்
வலித்துக்கொன்டுதான் இருக்கிறது . காரணம் நேற்று நான்
சிரித்தது ... மன்னிக்கவும் ஒரு பெண்ணிடம் . என் தலை முடியை பார்த்து
சிரித்துக்கொண்டே ஏதோ சொன்ன அவளிடம், அவள் என் தலைமுடியை பாராட்டுகிறாள்
என்பதை உணர்ந்து நானும் சிரித்தேன் . அது அவன் கண்ணிலா பட வேண்டும் .
நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு அறை விட்டான் .... எங்கிருந்து வந்து யாரா கரெக்ட் பண்ண
பாக்குற அவ எனக்கு தாண்டா என்று எப்பவோ பார்த்த ஒரு படம் ஒன்றின்
வசனத்தை உதிர்த்துவிட்டு போனான் . வசனம் நன்றாகத்தான் இருந்தது .
ஆனால் என் கண்ணம் வலிக்கிறதே ...

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு !
நிச்சயம் வாழவைக்கிறது. ஆனால் கொஞ்சம் வலிகளோடு !!!! ஆ!!

எழுதியவர் : Rangaraj (9-Sep-12, 9:58 pm)
பார்வை : 207

மேலே