ஓ ! தன்மானம் கொண்ட தமிழினமே...

ஓ ! தன்மானம் கொண்ட தமிழினமே...
----------------------------------------------------------------------------

அன்னார்ந்து பார்க்க வைக்கும்
பனை மரமும்..
ஆள் உயரம் பூத்து நிற்கும்
புகையிலையும் - சூழ
இச்சையுடன் நாம் வாழ்ந்த
இடம் எங்கே ? இங்கு
ஈழத்தாய் வீற்றிருந்த
தடம் எங்கே ?

உச்சம் பல தொட்ட
எம் உறவுக் கூட்டம்
ஊமைகள் ஆக்கப்பட்டு
ஊசல் ஆடி நிற்க,
எம்மைக் கருவறுத்து
எச்சமாய் எறிந்து சென்ற....

ஏட்டுக் கல்வியில்லா
எஜமான்கள் ஆடிய ஆட்டம்
ஐயம் களைந்த
ஆணவத்தின் உச்ச கட்டம்.

ஒற்றை திங்கள் தோன்றி
மறைந்து செல்வதற்குள் - இனம்
ஓராயிரம் சடலங்களாய்
மாறிய அவலம் ... எம்
விழிநீர் கொண்டு எழுதப்பட்ட
படுகொலை படலம் .

அண்டம் காக்கும் அந்த
ஆதிகேசவனும் - நாம்
பிண்டமாய் ஆனபோதும்
நெற்றிக்கண் திறக்கவில்லை

கண்டங்கள் பல - அதை
கண் கூட கண்ட போதும்
கண்டனமும் சொல்லவில்லை - எந்த
தண்டனையும் இவர்க்கில்லை.

இன்று ....

தீவனம் நாம் உண்று
சீவனம் செய்யவும்
கோமணம் அணிந்து- நம்
மானம் காக்கவும்..
ஆவணம் தான் உண்டு
'' அகதிகள் '' நாம் என்று.

யாவையும் தொலைந்தின்று
'' யாசகர் '' ஆகி நின்று - இறுதி
யாத்திரை வேண்டுகிறோம் - இந்த
யாக்கைகள் பயணம் செல்ல...

ஓ ! தன்மானம் கொண்ட தமிழினமே...

'' நந்திக்கடலில் '' மூழ்கி விடாதே ...
'' முள்ளிவாய்க்காலில் '' முடங்கி விடாதே
எம்மவர் கல்லறைகளின் காத்திருப்பு - நீ
'' கார்த்திகை பூக்களாய் '' மலர்வதற்காக..
காலத்தால் அழியாமல் தொடர்வதற்காக...

'' நாம் வீழ்வது இதுவே இறுதியாகட்டும் '' !
'' நாம் வாழ்வது இனிமேல் உறுதியாகட்டும் ''.


( இலங்கையில் இடம்பெற்ற கோரமான யுத்தத்தில்
உயிரிழந்த,ஊனமுற்ற,இடம்பெயர்ந்த மக்களுக்கு
இந்த கவி சமர்ப்பணம். )

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (11-Sep-12, 3:01 am)
பார்வை : 244

மேலே