நவம்பர் மாத மழை
ஒரு மழைத்துளி
முதல் மழைத் துளி
மலரின் மீது
முகப்பரு போல!
ஓர் மாலை நேரம்
மழை கொட்டும் மாதம்!
மலைகளை முட்டும்
மேகங்கள்
காட்சி பொருளாக கண்களுக்கு!
உரசிப் பார்க்கிறது மின்னல்
வீசுவதற்கே...
கூச்சம் கொண்ட
தென்றலை!
விட்டு விட்டு அடிக்கிறது
நவம்பர் மாத மழை
பாராசூட் கட்டி பறக்கிறது
மனது!
சாரலில் நனைந்து!
இதமான பருவக் காற்று
மனதுக்கு!
இதயம் பறிபோகாமல்
பார்த்துக்குக் கொள்ளுங்கள்!
விண்ணின் சாரல்
மண்ணில்...
சகதியின் வாரல்!
அணி வகுத்துச் செல்கிறது
வண்ணத்துப் பூச்சிகளாக...
குடைகள்!
சின்னச் சின்ன மழைத்துளிகள்
துள்ளி வந்து நனைக்கிறது
என்னை!
இதயம்...
எழுந்து நின்று தொடுகிறது
விண்ணை!
வெள்ளி வெள்ளி மழைத்துளிகள்
முறைத்துச் சென்று மறைகிறது
மண்ணில்!
விண்ணிலிருந்து...
மழையாய் வந்த துளிகள்
நதியாய் போகிறது..
என் மேனியில்!
அழகான நேரம்
இது, ஓர்...
அடைமழைக் காலம்!
ஒருமுறை நனைந்தால்
மறுமுறை நனைய துடிக்கும்
நெஞ்சங்கள்!
இன்பங்களில்...
நனைந்துக் கொண்டிருக்கும் போதுதான்
துன்பங்களும்...
திரும்பிப் பார்க்க வைக்கிறது!
இதுவும் மழையே!
கடல் போல காட்சியளிக்கும்
மழைநீரில்
படகுபோல மிதக்கிறது
குடிசைகள்!
நனைய மறுத்தாய்!
மழை...
நனைத்துப் பார்க்க நினைத்தது
சுவரை இடித்து!
கடவுளாக வணங்கிய
மழை...
காணிக்கையாக்கி சென்றுது
மக்களின் உயிரை...!
இது..
இயற்கையின் நியதி!