..............மரங்களின் வசைப்பாட்டு................

விசையோடு சுற்றும் உலகில்
ஆசையோடு வாழும் மானுடமே
வசைப்பாட்டு பாடுகின்றோம்
அசையாமல் போகின்றீரே


சுமையாய் நினைத்தாயே
பசுமை இல்ல விளைவை
சுமந்து வளைந்துவிட்டதோடு
எமனது கடமையை எளிதாக்கிவிட்டாயே


எரிகின்றது பூமிப்பந்து
தெரியவில்லையா உமக்கு
அரியதொரு வாழ்க்கையை
கரியமில வாயு கருக்கிவிட்டதிங்கே


ஞாலமது அழகியதே – அதன்
எதிர்காலமது எங்கள் செழுமையிலே
காலநிலை மாற்றமது வந்தும்
கண்டுகொள்ளாது போவதேனோ


மருண்டு போய் கேட்கின்றோம்
பல்லாண்டு வாழ விருப்பமில்லையோ
வறண்டு போகும் நிலம் கண்டு
அரண்டு போகாது வாழ்வதேனோ


வெப்பம் வெகுவாய் அதிகரித்தும்
சிற்பமாய் நின்று சிரித்துக்கொண்டீரே
தட்பவெப்ப மாற்றம் தடுமாறியதே
தடுக்க மனம் இல்லையோ


இளைத்துக் கொண்டு போகும்
பனிமலைகள் பரிதவிக்க
பல்லிளிக்கப் பார்ப்பீரோ
பார்த்துப் பார்த்து ரசிப்பீரோ


கடல் மட்டம் உயர வேண்டி
பல்தவம் புரிந்துவிட்டீரோ
பேரழிவு வரவேற்க பெரும்
விருந்து படைப்பீரோ


பூவுலகம் இங்கே புதிரானது
காவு வாங்கப் பார்க்கும்
வெப்ப ஏற்றமோ வெற்றிநடைபோடுது
இப்பொழுதும் எங்களை மறந்தாயோ


மழையின்றி அமைந்திடுமோ உலகு
நாங்களின்றி நிறைந்திடுமோ இவ்வுலகு – உயிர்
இரவல் வேண்டும் என்றெண்ணினால்
பரவல் குறைந்த எங்களைப் பாரும்


பொறுத்துப் பார்த்து கடலும் பொங்கியது
வெறுத்துப்போய் வானமும் பொய்த்தது
பொறுத்துக்கொண்டு போவாயே மானுடமே
நிறுத்த வழி தேடாயோ


பச்சை உலகம் மரித்துவிட
இச்சை கொண்டு விட்டாயே
நித்தம் என்னைக் கடந்து சென்றாய்
சித்தமது தெளியவில்லையோ


கண்ணிருந்தும் பார்வை இல்லையே
கவனம் இன்றி போகின்றாயே
கற்றலில் மட்டும் நினைவுகூர்ந்தாய்
கருத்தினில் வைக்க நினைவில்லையோ


வாழ விடவில்லை என்றாலும்
வாழவைக்க நினைக்கின்றோம்
எங்கள் வளம் பெருக்கப் பார்
உங்கள் எதிர்காலம் சிறக்கும் பார் !!!

எழுதியவர் : புலமி அம்பிகா (16-Sep-12, 1:12 pm)
பார்வை : 187

மேலே