!!!====(((அணு உலை)))====!!!
![](https://eluthu.com/images/loading.gif)
இடிந்தகரையில் நாங்கள்
இன்னல்களை சுமந்துகொண்டு
இடிந்துபோய் கிடக்குறோமே...
திரும்பி பாருங்களேன்
தீர்ப்பு ஒன்று கூறுங்களேன்...!!!
அணு உலை என்பது ஒரு மிகப்பெரிய ஆபத்தான செயல் என்பதை உலக நாடுகளே ஒப்புகொண்டு இருக்கின்றன, குறிப்பாக ஜப்பானில் அணுக்கதிர் கசிவு ஏற்பட்டதால் அந்த நாட்டு மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிந்த உண்மையே, இன்றும்கூட ஜப்பான் அணு உலைகளுக்கு பதிலாக பல மாற்று திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ஜப்பான் மீது ''லிட்டில் பாய்'' என்ற அணுகுண்டை ''ஹிரோஷிமா'' வில் வீசியது இந்த பேரழிவை உலகமே கண்டு நடுங்கியது, அணு கதிர்களின் ஆபத்து என்பது சாதாரண ஆபத்து அல்ல அது மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கக்கூடும்.
குறிப்பாக கூடங்குளம் அணு உலையை பற்றி சில தகவல்கள் வெளியாகின்றன அதாவது அந்த அணு உலை தொடங்கப்பட்டால் அதன் தாக்கம் அந்த சுற்றுவட்டாரத்தில் மூன்று கிலோமீட்டருக்கும் மேலாக இருக்கும் என்று கூறப்படுகிறது, அணு உலையில் இருந்து வெளிப்படும் வெப்ப சலன கதிவீச்சானது வெப்ப அழுத்தத்தோடு மூன்று கிலோமீட்டர் வரை பரவி இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன, இதனால் அந்த பகுதி மக்கள் பல நோய்களுக்கு ஆளாவதோடு பிற்கால சந்ததியினர் அதாவது கருவில் உருவாகும் குழந்தையையும் இந்த அணு கதிர்கள் தாக்ககூடும் என்றும் அதனால் பிறக்கும் குழைந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும், ஊனமாகவும், அறியப்படாத பல புதிய நோய்களுடனும் பிறக்ககூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன, இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்பட்டு அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஓராண்டு காலமாக அகிம்சை வழியில் நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு அணு உலையை திறந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிகொண்டு நிற்கிறது.
இன்றைக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக அந்த பகுதி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோவதை நாம் அனுமதிக்க முடியாது, அதோடு அந்த அணு உலை செயல்படுத்தபட்டால் அணு கதிர்களின் தாக்குதலால் அந்த பகுதியில் உள்ள கடல் மீன்களும் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஓராண்டு காலம் அந்த பகுதி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் ஆனால் அரசு அவர்களின் மீது காவல்த்துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி கண்ணீர்குண்டுகளை வீசி அடக்கு முறைகளை கையாண்டு இருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும், அதோடில்லாமல் அரசுக்கு மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லை என்பதை பச்சையாக நம்மால் உணரமுடிகிறது, மக்களைவிட ரஷ்யா ஒப்பந்தத்தோடு உருவாகும் இந்த அணு உலைதான் மிக முக்கியமாக அரசு கருதுகிறது.
1. அணு உலையில் ஆபத்து இல்லை என்றால் அரசு மக்களை அழைத்து நேரடியாக பேசி அணு உலையால் எந்த வித ஆபத்தும் இல்லை, நீங்கள் அச்சப்படாதீர்கள் என்று மக்களுக்கு உண்மையான உத்திரவாதத்தை அளித்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும், மாறாக இந்த அரசு மக்களின் மீது அடக்குமுறைகளை கையாண்டதிளிருந்தே புரிகிறது அணு உலை ஆபத்தானது என்றும் மிக அபாயகரமானது என்றும். மக்களை அழிவிற்குள் தள்ளும் ஒரு திட்டத்தை இந்த அரசு மேற்கொள்ளும்பொழுது அதை எதிர்பதுதானே முறையான செயல்.
2. அணு உலை ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று தெரிந்தும் அதை ஒரு காட்டு பகுதியிலோ அல்லா தார் பாலைவனத்திலோ மக்கள் வசிக்காத இடத்திலோ அணு உலையை உருவாக்க வேண்டியதுதானே முறை, ஆனால் மக்கள் வசிக்கும் பகுதியில் ஏன் இந்த அரசு அணு உலையை உருவாக்க வேண்டும்? பெரிய பெரிய அறிவு ஜீவிகள் எல்லாம் இதை எப்படி அனுமதித்தார்கள்? இது அரசிற்கு மக்களின்மீது சிறிதும் அக்கறை இல்லாததை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
3. இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கையில் முற்றிலும் விவசாய பூமியான தமிழகத்தில் ஏன் அணு உலையை நிறுவ வேண்டும்? அத்தோடு இல்லாமல் தமிழகம், நிலநடுக்கம் உருவாகும் பகுதி, சுனாமி உருவாகும் பகுதி, தானே போன்ற பல புயல்கள் உருவாகும் பகுதி, கடலை சார்ந்து இருப்பதால் மக்கள் இயற்கையின் சீற்றத்திற்கு பலியாகி கொண்டு இருக்கிறார்கள், இப்படி இருக்கையில் அணு உலையை நிறுவினால் அது எந்த நேரத்திலும் மக்களை பலிகொண்டு விடும் என்பதை இந்த அரசு சிந்திக்காதது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, அரசிடம் மக்களை காப்பாற்ற சொன்னால் அது அழிக்கும் செயலையே கையாண்டுகொண்டு வருகிறது.
ஒரே ஒரு ''லிட்டில் பாய்'' அணுகுண்டே ஜப்பானில் பத்து கிலோமீட்டர் சுற்றளவை சிதைத்து சாம்பலாக்கியதென்றால் மிக பெரிய அணு உலையான கூடங்குளம் அணு உலையால் எவ்வளவு பெரிய ஆபத்து வரக்கூடும் என்பதை எண்ணி பாருங்கள். உலக மனித நேயமே அணு உலைகளும் ஆயுதங்களும் வேண்டாம் என்று இருக்கும் பட்ச்சத்தில் நாம் அணு உலையை வரவேற்பதா? மின்சாரத்திற்கு பல மாற்று திட்டங்கள் இருந்தும் அணு உலை ஒன்றே தீர்வாக நினைக்கும் அரசின் போக்கு ஏற்றுகொள்ள முடியாததாகவே இருக்கிறது.
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத அரசால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும், மின்சாரமே இல்லாமல் நாம் கற்காலத்திற்கு சென்றாலும் சரி, இயற்கையை அழித்து அதனால் உருவாகும் பேரழிவில் இருந்து நம் பிற்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டிய கடமையும் நம் கைகளில்தான் இருக்கிறது. இந்த விடயத்தில் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் வராதபடி அரசு சிந்தித்து செயல்பட்டால் நன்மையே...
இப்படிக்கு
இடிந்தகரை மக்களுக்காக நான்.