நல்லுள்ளம் கொண்ட கிளி ...

ஆளரவம் அற்ற காடு ,
ஆகாயம் அடைத்த காடு !
செடிகொடிகள் செழித்த காடு ,
செழுமை பலகொழித்த காடு ......

அவ்விட மொரு ஆலமரம் ,
அகலம் கொண்டு விரிந்தமரம் !
அண்டி வரும் பட்சிகளின்
அடைக்கல மாமந்த மரம் - அங்கு

சிறுவயதே வாழ்ந்த கிளி
செவ்வாய் சிவந்த கிளி !
பச்சை கொண்ட மரத்தின்பால்
பாசம் கொண்டே வாழ்ந்ததுவாம் ......

விடம் தோய்ந்த அம்புதனை
வில்லி லேற்றி விட்டெய்தான் !
தத்தைதனை குறி கொண்டு
தவறி ழைத்த வேடனவன் ....

விட்ட அம்பு விசைமாறி
விட்டனவே மரம் துளைக்க ,
தைத்த அம்பின் விடம்தன்னை
தாங்கியதோ அவ் ஆலமரம் !

விடம் இறங்கி ஊடுருவ
இலைக ளெல்லாம் இறந்துபட ,
பட்டமரம் மாண்டு விழும்
கெட்ட நாளை நோக்கியதாம் !

பட்சிகளோ பறந்து செல்ல
பிராணிகளும் நகர்ந்து விட
தத்தையது தான் மட்டும்
தங்குமிடம் மாற வில்லை .....

பசியாற பழமு மில்லை
பதுங்கிவாழ நிழலு மில்லை !
பட்ட கடன் மறவாது
தவம் கொண்டே தங்கியதாம் ....

தத்தை தனின் தன்னிரக்கம்
சொர்க்கம் வரை எட்டிவிட
தேவேந்திரன் திகைத் திட்டான் !
பட்சி அதன் பற்றுகண்டு ........

காளை வேடம் தான்பூண்டு
கானகத்தே வந்து நின்றான் !
தத்தை அதன் நிலைகண்டு
தன்திருவாய் திறந்த ழைத்தான் .....

கானகத்தில் மரங்க ளுண்டு
கவர்ந்துண்ண கனியு முண்டு
கொண்ட இடம் மாறது
கண்டநிலை கொண்ட தென்ன ?

செழித்து நின்ற மரம்தன்னில்
செழிப்பாக பழங்க ளுண்டேன் !
பசுமையோடு நின்ற நேரம்
பயன்கள்பெற்று வாழ்ந்தி ருந்தேன் !

பலன் கண்ட வேளைதனில்
பக்குவமாய் வாழ்ந்து விட்டு ,
பரிதவிக்கும் நேரம் கண்டு
பிரிவு கொள்ளல் தகுதிதானா ?

பழகும்வரை பழகி விட்டு
பறிக்கும்வரை பறித்து தின்று
துயரம் வரும் நேரம்தனில்
தூரம் கொள்வோர் மாந்தர்களே !

அங்ஙனமே நான் வாழ்ந்தால்
அவ்வாழ்வு இழிந்து படும் .
இங்ஙனமே வாழும் வாழ்வு
இறந்தபின்னும் நிலைத்து விடும்....

தத்தைமொழி வார்த்தை கண்டு
இந்திரனும் இன்ப முற்று
பட்டமரம் வளம் கொழிக்க
வரம்தனையே வழங்கி விட்டான்...

பட்டமரம் பச்சை கொண்டு
பலகாலம் வாழ்ந்தி ருக்க
சிலகாலம் வாழ்ந்த கிளி
இறந்தும் இன்றும் வாழ்கிறதாம்.......



( சிறுவயதில் கேள்விப்பட்ட கிளியின் கதையை வைத்து எழுதிய கவிதை இது )

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (19-Sep-12, 8:21 pm)
பார்வை : 747

மேலே