எங்கே போனாய் மழையே...?

சூரிய தேவனின்
சுட்டெரிப்புக்குள்
நிலமகள்
முர்ச்சையாகிகொண்டிருகிறாள்
ஊண்டிச்சீண்டிப்பார்த்தால்
உரமற்றுபோன
மனங்களுடன் மரங்கள்
மாய்ந்துகொண்டிருகின்றன
மாறி மாறி வீசிய
காற்றுக்கூட மனிதர்களுக்கு
வஞ்சகம் செய்து
வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறது
அறுவடை அஸ்தமனம் ஆகிப்போனதால்
அடுப்பங்கரைகூட
பூனைகளின்
அரண்மனையாகிப்போனது
அழுது பால்கேட்ட
என்குழந்தை பால்சுரக்கா
மனைவி மார்புடன்
மல்லுக்கட்டி சோர்ந்து தூங்குகிறது
நெஞ்சு சிறுத்து
வயிறு பெருத்து
வெறித்துப்பார்த்த விழிகளுடன்
பக்கத்துவீட்டுப்பையன் -என்
வீட்டுப்பானையை உற்றுப்பார்கிறான்
அதில் தண்ணீரும் தீர்ந்துபோனதை அறியாமல்
மாலையாகியது
மனைவியுடன் சேர்ந்து கொண்டு
ஆகாயத்தை உற்றுப்பார்க்கிறேன்
மழைவரும் அறிகுறி மருந்துக்கும் இல்லை
எங்கே போனாய் மழையே...?
நீயும் தேர்தல் காலத்தில் மட்டுமே
தரிசனம் தரும் அரசியல்வாதிபோல
ஆகிவிட்டாய்....