தீதும் நன்றும் பிறர்தர வரும்

~ இனியநிலாவுடன் ஒரு பயணம்

இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே..

நேற்று மாலை முதல், மலையின் மறைவில் உறங்கிய கதிரவன், தூக்கத்தை களைத்துவிட்டு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தான். எதிர்வீட்டில் பூஜைமணி சத்தமும் தெருவோரம் சைக்கிள் மணி சத்தமும் விட்டு விட்டு இசைத்துக் கொண்டிருந்தது. காலை மணி எழு. இனியநிலா உறங்கிக்கொண்டிருந்தாள்.

இனியநிலா..!

நிலவாகவே உலாவரும் நான்கு வயது சுட்டிப் பெண். பெயருக்கேற்றார்போல் நிலவிற்கு இணையான அழகு . ஏழு வருட தவத்திற்குப்பிறகு பெரிய நிலா வசந்திக்கு பிறந்த குட்டிநிலா. அம்மா வசந்திக்கு இவள் நிலா. அப்பா ராஜேஷுக்கு இவள் இனியா.

வசந்தி சமையலறையிலிருந்து சந்தம் போட்டு எழுப்பினாள்.

"நிலா எழுந்திருமா ஸ்கூலுக்கு போகணும்ல.." முன்பே கண் விழித்துவிட்டு அம்மா சத்தத்தைக் கேட்டு சிரித்துக் கொண்டே தனது செல்லப் பொம்மையோடு போர்வைக்குள் விளையாடிக்கொண்டிருந்தாள் நிலா.

வசந்தி மீண்டும் சத்தமிட்டாள்.. நிலா.. நிலா...

மீண்டும் போர்வைக்குள் ஒரு சிரிப்பு.. அருகே வந்த வசந்தி புரிந்துகொண்டாள். சிரித்துக்கொண்டே வசந்தி சொன்னாள்,

"ஐயயோ நேத்து அப்பா வாங்கிட்டு வந்த சச்கலேடே நிலா சாப்டாம தூங்கிட்டா போல. சரி சரி.. இத எதுத்தவீட்டு புகழுக்கு கொடுக்கலாம் பாவம் அவன்..." சொன்ன மறுகணம்,

"அம்மா அது எனக்கு" என்று சொல்லிக்கொண்டே சத்தம் போட்டு எழுந்தவள், வசந்தி கழுத்தைக் கட்டிக்கொண்டாள்..

என்னையா ஏமாத்துற..?

"என் குட்டிய எப்படி எழுப்பனும்னு எனக்கு தெரியாதா.?" என்று சொல்லிக்கொண்டே முத்தமிட்டு நிலாவை குளியலறைக்குள் அள்ளிச்சென்றாள் வசந்தி.

பல்துளைக்கி குளிக்க வைக்கையில் துள்ளிக்கொண்டே நிலா கேட்டாள்..

அம்மா சாக்கலேட் எங்கம்மா..? நல்ல பிள்ளையா ஆடாம குளிச்சா, நிலாவுக்கு அம்மா சாக்கலேட் தருவேணாம்.. சரியா என்றாள் வசந்தி.

பதில் ஏதும் சொல்லாது மீண்டும் கேள்வியைத்தொடுத்தால் நிலா..
அப்பா எங்கம்மா..?

எதோ பைக் சரியாய் ஓடலயாம், அத சரிபண்ணி என் அம்முகுட்டி நிலவா ஸ்கூலுக்கு கூட்டிகிட்டு போகனுமுள்ள.. அதான் அப்பா மெக்கானிக் கடைக்கு போயிருக்காரு என்று வசந்தி சொன்னாள், நிலா முகத்தில் சோப்பு போட்டுக்கொண்டே..

வசந்தி முகத்தில் நீரை வாரி இறைத்தாள் நிலா. சிரித்தாள் வசந்தி..

காலை 7 மணி என்பதால் மெக்கானிக் கடையில் ஆள் இல்லை. கடையின் பெயர்பலகையில் இருந்த அலைபேசி எண்ணிற்கு ராஜேஷ் அழைத்தான். மெக்கானிக் சண்முகம் கடைக்கு பின்புறம் இருந்த தனது வீட்டில் இருந்து 10 நிமிடத்தில் வந்தான்.

வணக்கம் சார்.. பைக்குக்கு காலையிலேயே என்னா ஆச்சு..? கேட்டான் சண்முகம்.

தெரிலப்பா..!

நேத்தைக்கு ஆபீஸ்ல இருந்து வாரப்ப நெறயவாட்டி வண்டி ஆப் ஆச்சு.. என்னான்னு தெரியல, கொஞ்சம் பாரேன். என்றான் ராஜேஷ்..

சரிங்க சார் கொஞ்சம் டைம் கொடுங்க என்றான் சண்முகம். தேநீர் அருந்த போனான் ராஜேஷ்..

சிறிது நேரத்தில் ராஜேஷை அழைத்து.. ஆச்சு சார். இப்ப ஓட்டிபாருங்க, சரியா இருக்கும். ஏதும் பிரச்சனைனா சொலுங்க சார் என்றான் சண்முகம்.

வண்டிக்கு என்னாச்சுப்பா..? என்று ராஜேஷ் கேட்க., கொஞ்சம் பெட்ரோல் பைப், ஏர் பில்ட்டர் அடைச்சு இருந்தது சார்.. அத சுத்தம் பண்ணி மாட்டி விட்ருக்கேன் என்றான் சண்முகம்.

50 ரூபாயை ராஜேஷ் கொடுக்க..100 ரூபாய் ஆச்சு என்று சொல்லி பிடிவாதமாய் வாங்கினான் சண்முகம்..!

வண்டி சத்தத்தைக் கேட்டதும் குளியலறையில் நிலாவை துவட்டிக்கொண்டிருந்த வசந்தியின் காலைப்பிடித்து தள்ளிவிட்டு அப்பா என்று சத்தமிட்டு ஓடிவந்தாள் நிலா.. அள்ளி அனைத்துக் கொண்டு,

இனியா குளிச்சு முடிஞ்சாச்சா.. ஸ்கூலுக்கு போலாமா என்று கேட்க.. ஹ்ம்ம் என்று சொன்னாள் இனியா..

ராஜேஷ் குளித்து முடித்தான்...

வசந்தி மடியில், சாப்பிடாமல் அடம்பிடித்துக் கொண்டு சாக்கலேட் கேட்டாள் நிலா... சாக்கலேட் தான, அப்பா ஸ்கூல் போறவழில வாங்கித்தருவேணாம் என்று சொல்ல.. ஹ்ம்ம் நெஜமா..? என்றாள் நிலா. என் செல்லதுட்ட பொய் சொல்லுவேனா அப்பா என்று சொல்லி அன்பாக ஊட்டிவிட்டான் ராஜேஷ்..

இருவரும் கிளம்பினார்கள்... வண்டியின் முன்னாள் ஏறி அமர்ந்து கொண்டாள் இனியா.. வழக்கம் போல, நிலாவிடம் முத்தம் கேட்டாள் வசந்தி. மறுத்தாள் நிலா.. சிரித்துக்கொண்டே நிலாவின் நெற்றியிலும் கன்னத்திலும் இரண்டு முத்தங்களை சிதைதாள் வசந்தி.

சரிமா போயிட்டுவரேன் என்றான் ராஜேஷ்..

நேத்தைக்கு மாதிரியே அரிசி வாங்க மறந்துட்டு வந்துராதீங்க, அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும் என்றாள் வசந்தி...

ஹ்ம்ம் சரி வாங்கிட்டுவாரேன் என்று ராஜேஷ் சொல்ல, புகையைக் கக்கியது பைக்...

தெருவைக் கடந்ததும் காற்று பலமாக வீசுவதைக் கவனித்தான் ராஜேஷ்..

பஸ்க்கு ஏன் நாலு சக்கரம் ஆடோவுக்கு ஏன் மூணு சக்கரம் என ஆரம்பித்து, வழியில் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டே வந்தாள் இனியா..

தட்டை ஏந்திக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் அமர்திருக்கும் ஒரு சிறுவனைப் பார்த்து ராஜேஷிடம் கேட்டாள். ஏன்ப்பா அந்த அண்ணா தட்டோட உக்காந்திருக்காங்க..? ம்ம்ம் பசினாலயா இருக்கும் செல்லம் என்றான் ராஜேஷ்..

அப்ப இந்த சாப்பட்ட கொடுக்கலாமா என தனது மதிய உணவை கைகாட்டி கேட்டாள். ஹ்ம்ம் கொடுக்கலாம்.. ஆனா அவங்க காசுமட்டும் தானே வாங்குவாங்க என்றான் ராஜேஷ்.. அவள் கேள்விகளை நிறுத்தவில்லை...

அந்த அண்ணாவிற்கு அப்பா யார்? அவர் பெயர் என்னா? என கேள்விகளின் பட்டியல் நீண்டது. அவள் உச்சந்தலையில் சிரித்துக்கொண்டே அவ்வப்போது முத்தமிட்டான் ராஜேஷ்.

பள்ளியின் முன்வாசலை நெருங்கும் நேரம், மற்றொரு பைக்கில் அசுரவேகத்தில் வந்த ஒருவன் அவர்களை முந்தி சென்று, தான் பாதியாய் பிடித்து முடித்த சிகரட்டை சாலையோரம் வீசினான். இனியா பயந்தாள்..!

வழக்கம் போல்... இனியாவிற்கு சாக்கலேட் வாங்க ராஜேஷ் பள்ளி முன் பைக்கை நிறுத்தினான்... அப்பா உங்களுக்கு சாக்கலேட் வாங்கிட்டு வருவேனாம் நீங்க இந்த வண்டிலேயே இருபீன்களாம்.. ஓகே வா? என்றான் ராஜேஷ்...

ஹ்ம்ம் என்று தலையை ஆட்டினாள் நிலா பள்ளி முன் வாசலில் நிற்கும் பலூன் விற்பவரை பார்த்துக்கொண்டே.. கடையை நோக்கி நடந்தான் ராஜேஷ்..

காற்றின் திசையில் உருண்டு வந்து, வண்டியின் அடியே தஞ்சமானது அவன் தூக்கி எறிந்த சிகரெட். பேரம் பேசி 100 வாங்கியவன், சரியாக சொருகாத பெட்ரோல் குழாயில் இருந்து கசிந்து கொண்டிருந்த பெட்ரோல், சிகரெட் தீப்பொறியோடு உறவாட ஆரம்பித்தது..

வண்டிக்கு சாய்வான ஸ்டாண்டு போடப்பட்டிருந்ததால், பெட்ரோல் டேங்க்கின் ஒரே பக்கத்திற்கு திரண்டு வந்தது பெட்ரோல். அழுத்தத்தின் காரணமாக அது வெளியேறும் வேகமும் சற்று அதிகரித்தது..

பெட்ரோல், நெருப்பிற்கு கைகொடுக்க, அது மெல்ல மெல்ல மேல் எழுந்தது..

சாக்கலேட் வாங்கிக்கொண்டு வந்த ராஜேஷ் அதை சற்று கவனிக்கலானான்.. இதயத்துடிப்பு சற்றென்று எகிறியது.. செய்வதறியாது இனியா என்று கத்திக்கொண்டு 30 மீட்டர் தொலைவில் இருந்து ஓடிவந்தான்.. மேல் எளும்பியா தீயின் முயற்சி வெற்றிபெறவே.. பைக் காண நேரத்தில் வெடித்துச் சிதறியது.. அந்த இடம் தீ சுவாலை ஆனது..

ஓடிவந்து விழுந்தான் ராஜேஷ்.. அவனது ஒருகையில் இருந்தது சாக்கலேட்..
மறுகையில் பறந்து வந்து விழுந்தது இனியாவின் பிஞ்சு விரல்கள்.

ஏழுவருடம் தவமிருந்து பெற்றபிள்ளை காணவில்லை. பிஞ்சுச்சிலை தீப்பொறிக்கு இரையானது. ராஜேஷின் ஓலம் அடங்கவில்லை. நடந்ததறியாது சுற்றத்தார் திகைத்துப்போனர். ராஜேஷை தேற்றினர்.

அவளோடு சேர்ந்து ராஜேஷின் கனவுகளும் எரிந்து போனது.. யாரோ இருவர் செய்த தவறுக்கு, தண்டனையைத் சுமந்தாள் இனியநிலா...

"தீதும் நன்றும் பிறர்தரவாரா" என்ற பொன்மொழி பொய்யாய்ப் போனது..!

7 வருடம் கழித்து அவர்களுக்கு கிடைத்த இந்த வரம், மீண்டும் கிடைக்குமா..? தெரியவில்லை...

முற்றும்...

எழுதியவர் : அகல் (26-Sep-12, 12:50 pm)
பார்வை : 392

மேலே