இறுதிப் பயணம்

முன் பதிவு செய்யப் பட்டு
புறப்படும் தேதி குறிப்பிடாத
ஒரு வழிப் பயணம்-இதில்
ஒருவருக்கு மட்டுமே அனுமதி

இந்தப் பயணத்தை யாரும்
விரும்புவதில்லை-ஆனாலும்
பயணம் பயணியை
விடுவதாயில்லை

வழி தெரியா ஊருக்கு
வேறு வழியே தெரியாமல் போகும்
கட்டாயப் பயணம்.!

கூடிக் குலாவிய உறவும்
பாசம் பாராட்டிய பந்தமும்
பயணத் துணையாய்
வருவதில்லை

ஓடி ஓடிச் சேர்த்த பொருளையும்
பாடுபட்டுச் சேர்த்த பணத்தையும்
கூடவே எடுத்துப் போக
முடிவதில்லை

வெறுங்கையுடன் பிறந்தாலும்
வெறுங்கையுடனே
போகப் போவதில்லை

வலது தோளில் செய்த நன்மை
இடது தோளில் செய்த தீமை
இவையிரண்டையும்
கொண்டு போவது உண்மை

சொர்க்கம்
அற்பமாய் தோணும்
அப்போது

சொர்க்கம் செல்ல
துடித்திடுவாய்
இப்போது

செய்த கருமம்
வந்து சாட்சி சொல்லுமே
தப்பாது

இவ்வுலகம்
பயணப் பரிசாய் தருவது
சில கண்ணீர் துளிகள்
சில ஒப்பாரி ராகங்கள்
சில வாஞ்சை சொற்கள்
சில வசை சொற்கள் கூட

சொல்லாமல் கொள்ளாமல்
போகும் பயணத்தில்
வழியனுப்பி காட்டில் விட்டு விட்டு
சொல்லாமல் கொள்ளாமல்
திரும்பி வந்து விடுவார்கள்.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (28-Sep-12, 8:55 am)
பார்வை : 346

மேலே