நடமாடும் தெய்வங்கள் - கே.எஸ்.கலை.

சுகங்களைப் பாழாக்கி -தன்
குருதியைப் பாலாக்கி
சொர்கமோ நரகமோ- நான்
கண்ட முதல் சொந்தம்
கண் கண்ட தெய்வம் தாய் !

குருதியை நீராக்கி
வியர்வையாய் வெளியாக்கி-தன்
கண்ணீரைக் காட்டாமல்
என்னுயிரை எனக்களித்த
நடமாடும் தெய்வம் அப்பா !

அகரம் அறிவித்து
அறிவூற்றி தெளிவாக்கி
சிகரங்களின் முகவரிகள்
சிந்தைக்கு காட்டிய
சிரத்தை மிக்க ஆசான்கள் !

பட்டினியில் கிடந்து
பச்சை வயல் உழுது
உயிர் பிழைக்க
பயிர் விளைக்கும்
பாமர விவாசாயிகள் !

மரணத்தின் எல்லையில்
உயிருக்காய் மன்றாடும் போது
வேளை மறந்து வேலை செய்யும்
வெள்ளை உள்ளம் கொண்ட
நல்ல மருத்துவர்கள் !

வெயிலோ மழையோ
வேதனையின்றி தஞ்சமடைய
கூரையிட்ட வீடுகட்டி தந்துவிட்டு
ஒழுகும் குடிசைகளில் வாழும்
ஏழைக் கொத்தன் !

ஊர் விட்டு ஊர் வந்து
உண்ண உணவின்றி வாழ வழியின்றி
திக்கு தெரியாமல் தடுமாறும் போது
திட்டிக் கொண்டே கடன் கொடுக்கும்
பெட்டிக் கடைக் காரர் !

மதம் என்ற மதம் தேவையில்லை-நல்ல
மனம் என்ற குணம் இருந்தால் போதும்
நடக்கும் சாலையெல்லாம்
நடமாடும் தெய்வங்கள்
நாம் காண முடியும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-Oct-12, 8:31 am)
பார்வை : 499

மேலே