இரவும் விழியும்

இமை தழுவிட மறுத்தன
விழி இரண்டும்
வியர்த்தது உடல் எல்லாம்
அதிவேகமாய் மின்விசிறி
சுழன்ற போதும்

இயந்திர வாழ்க்கையில்
சுயத்தை இழந்ததாய்
மனதில் ஒரு நெருடல்

புரண்டும் பார்த்தேன்
தண்ணீரும் குடித்தேன்
ஏனோ விழிகள்
இமையை நேசிக்கவில்லை

மணி பதினொன்று
பன்னிரண்டு ஒன்று

கடந்தும் இமைகள்
முரண்பட்டு விலகி நின்றன

எழுந்தேன் கண்கள் நடந்தன
கால்கள் தொடர்ந்தன
நின்றன ஆள் இல்லா
மொட்டை மாடியில்

காத்தாடி ஓடியும்
கிடைக்காத காற்று
குளிருட்டப்பட்ட அறையில்
இல்லாத சிலிர்ப்பு

உடலெங்கும் பரவியது
மெல்லிய காற்று
தென்றலாய் என் தேகம்
தீண்டிய போது

சற்றே சிலிர்த்து நிமிர்ந்ததால்
கண்டேன்
வானெங்கும் வெள்ளிக்காசுகள்
சிதறிக்கிடந்தன
நட்சத்திரங்களாய்

ஐந்து நிமிடம் கூட
கடந்திடவில்லை
என்ன மாயம் செய்தனவோ
நட்சத்திரங்கள்

விழிகளின் காதல் வலையில்
பின்னிக் கொண்டன
இமைகள்

இயந்திரத்தோடு இயந்திரமாய்
வாழ்ந்துவிட்டேன் என்று

நினைத்தது மட்டுமே
நினைவிருக்கிறது

ஆண்டுகள் பல கடந்து
கதிரவன் முகத்தில் விழித்தேன்
எப்போது நித்திரைக்குள்
புகுந்தேன் என்று அறியாமல்

எழுதியவர் : Meenakshikannan (4-Oct-12, 1:49 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 191

மேலே