தங்கம்மா
தங்கமாளின் தாயும் தந்தையும் 'தங்கம்' என்று பெயர் வைத்ததே அவள் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தான்.
தங்கம் என்ற பெயர் பெற்றதின் நேரப்பலன் அவள் காதில் இன்றுவரை ஒரு பொட்டுத்தங்கம் அணியும் புண்ணியம் கிடைக்கவில்லை, ஆனால் குணம் தங்கம்.
வாலிபத்தில் மஞ்சள்கயிறு கட்டியவன் கட்டிய கடமைக்கு வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டான்.
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்தவனும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போனான். கூலி வேலை செய்தால் தான் அவளுக்குச்சாப்பாடு அல்லது அரைப்பட்னி தான்.
கடவுளே கதி என்று காலத்தை ஓட்டி வந்தால். காணாமல் போன மகன் ஒருநாள் திடீர் என்று வந்து நின்றான்...! வந்தவன் தனியாக வரவில்லை துணை யோடும் கையில் ஒரு வயது பிள்ளையோடும்.
தங்கமாளுக்கு தலை கால் புரியவில்லை மகனை பார்த்து விட்ட சந்தோஷத்தில், அப்படியே மெய் மறந்து போனவளாய் மகளை அணைத்து முத்தமழை பொழிந்தாள்.
மகனும், அம்மாவுக்கு கொஞ்சம் துணிவகைகளும், அவள் காதுக்கு இரண்டு கம்மலும் வாங்கி வந்திருந்தான். அதை அவனே அவளுக்கு காதில் மாட்டியும் விட்டான்.
காதைத்தொட்டு தடவிப்பார்த்த தங்கமாளுக்கு தான் பிறந்த பிறவியின் பலனை அடைந்து விட்ட மகிழ்ச்சி. பக்கத்து வீட்டு பாக்கியத்திடமும், எதிர் வீட்டு இசக்கியம்மாவிடமும் தன் காதை காட்டி எம்புள்ள எனக்கு 'தங்க கம்மல்' வாங்கி கொண்டு வந்திருக்கான் பாருங்க என்று பெருமைப்பட்டுக் கொண்டாள்.
வாரம் ஒன்று கழிந்தது, இரவு உணவுக்குப்பின் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில் மகனிடம் " ஆமாம் மகனே நீ பட்டணத்தில் என்ன தொழில் செய்கிறாய்? உன் வேலை எல்லாம் எப்படி நடக்கிறது?" என்று தாங்கமால் விசாரித்தாள். அம்மா அது பற்றி நானே உன்னிடம் பேச வேண்டுமென்று தானிருந்தேன், நீயே அது சம்மந்தமாகக்கேட்டு விட்டாய் நான் இவ்வளவு நாளும் ஒரு கம்பெனியில் தான் வேலை செய்தேன் இவளும் அதே கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கே தான் நாங்கள் காதலித்து திருமணமும் செய்து உங்கள் பேரனையும் பெற்றுக்கொண்டோம்.
இப்போது சொந்தமாக ஒரு சிறு தொழில் செய்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று யோசித்து, அதற்காக பேங்கில் லோன் எடுக்க ஓம் பேருல இருக்கிற இந்த வீட்டு பத்திரத்தையும் இந்த பேங்க் பேப்பர்களில் உன் கையெழுத்து வாங்கிக்கொண்டு போலாம்தான்.... என்று பயத்துடனும் பதற்றத்துடனும் பேசினான்.
பெற்ற மனம் பித்து தானே! அதற்கென்னடா ராசா உனக்கு இல்லாத பத்திரமா? என்று சொல்லி பத்திரத்தையும் கொடுத்து அவன் காட்டிய இடங்களில் பேங்க் பேப்பர்களில் கையெழுத்தையும் போட்டு கொடுத்தாள்.
வினாடிகள், மணிகள் , நாட்கள், வாரங்கள், மாதங்கள் என ஆறு மாதங்கள் கடந்தன.
வீட்டுப்பத்திரத்தை வாங்கிக்கொண்டு போன மகன் ஊர் போய் சேர்ந்த செய்தியும் தெரிவிக்கவில்லை அம்மா பற்றி அவன் கவலைப்படவும் இல்லை.
உடல் நலமில்லாமல் வீட்டிலே முடங்கிக்கிடந்த தங்கம்மா வேறுவழி இல்லாமல் பக்கத்து வீட்டு பாக்கியத்தை கூப்பிட்டு இதைக் கொண்டு போய் அடகு வைத்து கொஞ்சம் பணம் வாங்கிட்டு வா, உடல் நலம் தேறியதும் திருப்பிக்கலாம் என்றவள் தன் காதில் கிடந்த கம்மல் இரண்டையும் கழற்றி பாக்கியம் கையில் கொடுத்தனுப்பினாள்.
கம்மலை வாங்கி சென்ற பாக்கியம் சிறிது நேரத்தில் திரும்பி வந்து 'எக்கா நீ கொடுத்து விட்ட கம்மலு தங்கமில்லையாம்...! சாயம் பூசிய பித்தளை நகையாம்! நகைக்கடை அண்ணாச்சி சொன்னாரு என்றாள்.
என்னடி சொல்ற என்று கம்மலை கையில் வாங்கி கொண்டு பதற்றமாக ஐயோ! எம்மகன் இவ்வளவு அயோக்கியனா? என் வீட்டு பத்திரத்தை ஏமாற்றி வாங்கவா இவ்வளவு நாடகமாடினான். கடவுளே நான் என்ன செய்வேன்?
ஆம்புள்ள பெத்ததும் ஆனந்த பட்டேனே! ஒன்ன பெத்ததுக்கு பொண்ணா பெத்திருந்தா அன்பா, ஆதரவா, இருந்திருப்பா.
ஐயோ நான் இப்போ என்ன செய்வேன்? என கதறி அழுதவள் மார்பில் அடித்து துடித்து அழுதவண்ணம் வாயில் ரத்தம் கொப்பளிக்க நெஞ்சைப்பிடித்துக் கொண்டே தரையில் சாய்ந்தாள். நான் இறந்த சேதி அறிந்து எம்மகன் திருந்தனும், திருந்தனும் என முனகியபடியே உயிரை விட்டாள் தங்க(அ)ம்மா.