பெருந்தண்மை
சிறுகதை:
பெருந்தண்மை
( வே.ம.அருச்சுணன் - மலேசியா)
மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு முப்பது மணி வரை முகூர்த்த நேரம். ஏழு மணிக்கு மனைவியுடன் திருமண மண்டபத்துக்குள் சென்று விடுகிறேன். மண்டபம் நிறைந்து காணப்படுகிறது. எங்களுக்காகவே பிரத்தியேகமாகப் போடப் பட்டது போல் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன இருவரும் அந்த இருக்கையில் மகிழ்வுடன் அமர்ந்து கொள்கிறோம். எந்தவொரு தடையுமின்றி மணமக்களைத் தெளிவாகக் காண முடிந்ததில் என்னைவிட மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை அவளது முகத்தில் இளையோடியப் புன்னகையே தெளிவாகக் சாட்சியமளித்துக் கொண்டிருந்தது. மணமக்கள் அமர்ந்துள்ள மேடையை மனைவி உன்னிப்பாகக்கவனிக்கிறாள்.
நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். எனக்கு அறிமுகமான முகங்களாக யாரும் தென்படவில்லை! மனதில் ஒரு வெறுமை ஏற்படுகிறது. சில வினாடிகள் என் மனதில் குடி கொண்டிருந்த மகிழ்ச்சி சற்று விலகி நிற்கிறது! மனதை நானே ஆறுதல் படுத்திக் கொண்டு மனைவியைக் கவனிக்கிறேன். அவள் எதையோ மும்முரமானத் தேடலில் ஈடுபட்டுள்ளதைக் கவனிக்கிறேன்.மனதுக்குள் நானே சிரித்துக் கொள்கிறேன். மனைவியைப் போன்று நானும் மணமேடையை ஆழமாக ஒரு கண்ணோட்டமிடுகிறேன். உற்றார் உறவினர்கள் புடைசூழ மணமக்கள் இருவரும் மிகவும் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றனர். எல்லாரது முகங்களிலும் மகிழ்ச்சியும் புன்னகையும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன!
ஆண்களும் பெண்களுமாக மேடை முழுவதும் மணமக்களின் இருவீட்டாரும் கூடியிருந்தனர். நெருங்கிய உறவுகள் எவரும் விடுபடாமல் அங்கு இடம்பெற்று விட்டனர் என்று சொல்லுமளவிற்குக் கூட்டம் பெரியதாகவே இருந்தது!பெரியவர்கள் கூடிச்செய்ய வேண்டிய அந்நிகழ்வில் இளசுகளின் ஆக்கிரமிப்பு மிகுந்து காணப்பட்டது! பெரியவர்கள் பார்த்துச் செய்ய வேண்டிய காரியமா அல்லது சிறியவர்கள் பார்வையில் நடைபெறவேண்டிய காரியமா? இந்த எண்ணம் என் உள்ளத்தில் தோன்றி மறைகிறது. ஆண்டு அனுபவித்த பெரியோர்கள் செய்ய
வேண்டிய நல்ல காரியத்தை இளசுகளால் வீட்டுப் பெரியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் சிதறுண்டு போவதைக் காணப் பொறுக்க வில்லைதான்!
பெரியவர்கள் சொல்லித் தரவேண்டிய பண்பாடுகள் முறையாகச் சொல்லித் தரவில்லையாததால் நிலைத் தடுமாறிப் போயிருக்கும் இளசுகளின் வாழ்க்கை அங்குக் கேளிக்கைக்குரியதாகிப்போயிருந்தது.
“என்னங்க, உங்க நண்பரைக் காணலியே?” குறி வைத்து யாரையோதேடியபடி மனைவி கேள்வி கேட்கிறாள்.
“நானும்தான் நண்பரைத் தேடுகிறேன். என் கண்ணிலும் அகப்படலியே! ஆ…ஆ...அதோ..! அதோ..! மாப்பிள்ளை அருகில பட்டு வேட்டியும் சிப்பாவும்
அணிந்து கொண்டு முறுக்கி விட்ட மீசையோட, அருகில் மங்களகரமா மஞ்சள் நிறப்பட்டுப் புடவை அணிந்து கொஞ்சம் தடிப்பா...ஒரு அம்மா நிற்கிறாங்களே அவர்தான் நண்பர் இலோகநாதன் அவர் மனைவி சீத்தா.!” அடையாளம் சரியாகக் காட்டியதாக நான் மகிழ்ந்து கொள்கிறேன்.
“ இளமையாக இருக்கிறாங்களே! உங்க நண்பருக்கு ஐம்பது வயது ஆயிட்டத நம்பவே முடியல! அவரது மனைவி அணிந்துள்ள சேலை சும்மா சொல்லக் கூடாதுங்க. ரொம்ப அழகா இருக்குங்க.!” மனதில் பட்டதைச் சொல்வதில் வழக்கம் போல் மகிழ்ச்சியடைந்தாள்.
என் மனைவியிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயம் எது வென்றால் எதையும் மனம் திறந்து பாராட்டிப் பேசும் பழக்கத்தை அவள் வழக்கமாக்கிக் கொண்டதுதான்.
நண்பர் இலோகநாதன் என் பள்ளித் தோழர்.அவரது வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் என்பதால் திருமண ஏற்பாடுகள் ஆடம்பரமாகச் செய்திருந்தார். மண்டபம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்த அம்மண்டபம் வண்ண விளக்குகளால் தனி அழகைத் தந்து கொண்டிருந்தது. நுழைவாயின் இடப்பக்கத் தரையில் போடப்பட்டிருந்த அழகிய கோலம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்திவிட்டது! போடப் பட்டிருந்த வண்ண மயில் ஓவியம் பெரும் மகிழ்வைத் தந்தது என்றால் அது மிகையில்லை.
இலோகநாதன் தன் மகன் திருமணத்திற்கு எவரும் விடுபடாமல் இருக்க அனைத்து உறவினர்களையும் அழைத்திருந்தார். நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அவரது முக்கிய நண்பர்களில் நானும் ஒருவர் என்பது உறுதியாகியிருந்தது. இதை அறிந்து கொண்ட போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.மண்டபம் நிறைந்து, வெளியில் போடப்பட்டிருந்த தற்காலிக பெரிய விருந்து கூடாரத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளும் நிறைந்து காணப்பட்டன.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது.வந்திருந்த உற்றார் உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ மங்கள ஓசை ஒலிக்க மணமகன் மணமகள் கழுத்தில் புனிதம் நிறைந்த மாங்கல்யத்தை அணிவிக்கிறான்.அட்சதைப் போட்டு மணமக்களை வாழ்த்துகின்றனர் மேடையில் கூடியிருந்தோர்.
நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள இசையை முழுவீச்சில் உரக்க வாசித்துத் திருமண நிகழ்வுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கின்றனர்.போர்முரசுக் கொட்டி ஓய்ந்தது போல் நாதஸ்வரக் கலைஞர்களின் ஓசை நிறுத்தப்பட்ட போது மண்டபம் சில வினாடிகள் ஆழ்ந்த அமைதியில் மூழ்கிப் போகிறது.
அடுத்த சில வினாடிகளில் அந்த மண்டபம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகிறது! மணமக்களை நோக்கி ஒரு சாரார் செல்கின்றனர்.திமுதிமுவென்று மண்டபத்தை விட்டு வெளியேறி விருந்து நடைபெறும் கூடாரத்திற்குச் செல்கின்றனர் மற்றொருச்
சாரார். சொல்லி வைத்தார் போல் சில வினாடிகளில் இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரும் வெளியேறி ஏற்கனவே இடம் பிடித்து நின்றவர்களோடு உணவுக்காக வரிசைப் பிடித்து நிற்கின்றனர்! மண்டபம் முழுமையாகக் காலியாகிப் போயிருந்தது!
மேடையில் நீண்ட வரிசைப் பிடித்து நிற்பதைக் காணும் போது நெருங்கிய உறவுக்காரர்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்ய வேண்டிய சடங்குகள் செய்து முடிப்பதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். அவர்களுக்குச் சிரமம் கொடுக்காமல் முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு நமது அன்பளிப்புகளைக் கொடுக்கலாம் என்ற முடிவுடன் மனைவியை அழைத்துக் கொண்டு விருந்து நடைபெறும் இடத்தை நோக்கிச் செல்கிறேன்.
இருபது கூடாரங்கள் போடப்பட்டு தற்காலிக விருந்து மண்டபம் கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டுக்குரியது. விருந்தினர்கள் சிரமமின்றி உணவுகளை எடுத்துச் சென்று உண்பதற்கான ஏற்பாடுகள் குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தன.
சைவ மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியே மேசைகள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வரிசைகளிலும் விருந்தினர்கள் சென்று தங்களுக்கு வேண்டிய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைவ உணவு பரிமாறப்படும் இடத்தில் அதிகமானோரும் சைவ உணவு இடத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர்.
போடப்பட்டிருந்த மேசைகளைச் சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.குறைந்த எண்ணிக்கையிலேயே உணவு உண்ணும் மேசைகள் காலியாக இருந்தன. திருமணம் நிகழ்வு முடிவுறும் முன்பே பலர் தொலை நோக்குடன் உணவு உண்ணத் தொடங்கியதன் விளைவே பெரும்பாலான உணவு மேசைகளில் விருந்தினர் உண்ணுக் கொண்டிருக்கும் காட்சியைக் காணமுடிந்தது! அனுபவம் அவர்களுக்குக் கைகொடுத்தது!
சிரமமின்றி மனைவியும் நானும் சைவ உணவை எடுத்துக்கொள்கிறோம். உணவு தட்டுகளுடன் இருக்கையைத் தேடுகிறோம். நான்கு திசைகளிலும் கண்களைச் சுழற்றுகிறேன்.
“அதோ பாருங்க அந்த மூலையில் மேசை காலியாக இருக்கிறது!” மனைவி சுட்டிய அந்த இடத்தைப் பார்க்கிறேன். ஆமாம் யாரோ ஒரு பெண்மணி அமர்ந்திருக்கிறார். மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரியக் கூட்டத்தில் அப்படியொரு இடம் காலியாக இருப்பது ஆச்சரியமே! அந்த இடத்தை நோக்கிச் செல்கிறோம். எங்களுக்கு முன்னாடி வயது முதிர்ந்த தம்பதியினர் மேசையில் அருகில் சென்று எதையோ வினவுகின்றனர்.பின்னர் அங்கிருந்து அகல்கின்றனர்.
சில வினாடிகளில் நானும் மனைவியும் அங்கே செல்கின்றோம். அங்கே நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி அமர்ந்திருக்கிறாள். பத்து பேர் அமர்ந்து உண்ணக்கூடிய மேசையில் அந்தப் பெண்மணி மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறாள்.
மரியாதைக்காக அந்தப் பெண்மணியிடம், “அம்மா... மேசையில் உட்கார்ந்து சாப்பிடலாமா?” உணவு தட்டுகளை ஏந்தியவாறு நான் பணிவுடன் கேட்கிறேன். மனைவி உணவு தட்டுகளுடன் அமைதியாக நின்றுக்கொண்டிருக்கிறார்.
அந்தப் பெண்மணி பதில் ஏதும் கூறாமல், அலட்சியமுடன் வேறு திசையை நோக்கிப் பார்க்கிறாள்! எனக்குச் சங்கடமாகிப் போகிறது! மனைவியின் முகம் ‘தீ பட்ட மலர்’ போல் வாடிப்போகிறது! அவளது நடவடிக்கை எனக்குத் தர்மச் சங்கடத்தைக் கொடுத்தாலும்,அப்போதைக்கு அவளது உதவித் தேவைப்பட்டதால் இணக்கப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று!
மீண்டும் அப்பெண்மணியிடம் தயவுடன், “ அம்மா..நாங்க கொஞ்ச நேரம் இந்த மேசையில் அமர்ந்து சாப்பிடலாமா?” அன்புடன் கேட்கிறேன்.அந்த பெண்மணி பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் வேண்டா வெறுப்புடன் பதில் கூறுகிறாள். “ ஆள் இருக்கிறாங்க!நீங்க வேறு இடத்தைத் தேடிக்கங்க! ” முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க வெறுப்புடன் பதில் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போகிறேன்.எனக்கு முன்பே பலரும் அந்தப் பெண்மணியிடம் இடம் கேட்டிருப்பார்கள் போலும், அதான் ஆத்திரம் போலும்.
மனைவி என்னை சமாதானப்படுத்துகிறாள். வயதில் மூத்தவர்கள் என்று இரக்கம் கூடப்படாமல் மரியாதை இன்றி இப்படி எடுத்தெரிந்து பேசுகிறாளே என்று நினைக்கும் போது மனம் சஞ்சலப்பட்டது! “ம்..! காலம் கெட்டுப் போச்சு இந்தக் கலியுகக் காலத்திலே இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ! ” என்று மனதில் எண்ணியபடி தளர்ந்த நடையுடன் அவ்விடத்தை விட்டு நகர்கிறேன். வாடிய முகத்துடன் மனைவி என்னைப் பின்தொடர்ந்து வருகிறாள்!
உணவுக்காக வரிசைப் பிடித்து நிற்கும் வரிசை மிக நீண்டதாக இருந்தது. பலருக்கு இன்னும் உணவு கிடைக்காமல்தவிப்பதைப்பார்க்க கவலையாக இருந்தது. சைவ உணவு வைக்கப் பட்டிருக்கும் இடத்தில் இரண்டொருவர் மட்டுமே அமைதியுடன் தங்களுக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் பெரியதாக இருந்தது.மறுநாள் திங்கட்கிழமை வேலை நாள் என்ற போதிலும், எந்தவொரு பரபரப்பும் ஏதுமின்றி வருகை புரிந்த அனைவரும் பொறுமை காத்தது, விருந்துண்டு மகிழும் காட்சியைக் காண வியப்பாக இருந்தது! இப்போதெல்லாம் நம்மவர்களுக்கு எந்த நாளும் திருநாள்கள் போலும்!
கூடாரத்திற்கு வெளியே என் பார்வையைச் செலுத்துகிறேன். எங்களைப் போன்று மேசைகளில் அமர்ந்து உணவு உண்ண வாய்ப்புக்கிடைக்காமல் சிலர் அங்கே நின்று கொண்டே உணவு உண்ணும் காட்சியைக் காண்கிறேன். பருவாயில்லையே..! நமக்கும் கைகொடுக்க நண்பர்கள் இருக்கிறார்களே! என்று ஆறுதல் கொள்கிறேன்.
சற்று முன்பு சென்று வந்த உணவு மேசையைத் திரும்பிப் பார்க்கிறேன். அதே பெண்மணி தங்களின் குடும்பத்தாரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. உணவு கொண்டு வரப்போனவர்கள் இன்னும் வந்து
சேரவில்லை போலும்! அவளது பார்வை உணவு வழங்கும் இடத்தை நோக்கியே இருந்தது! அவள் அமர்ந்திருக்கும் மேசை மட்டுமே காலியாக இருந்ததால் இடம் கேட்டுப் பலரும் அவளைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தனர்! அவள் மிகவும் அழுத்தமானவள் போலும்! யாருக்கும் மசியாமல் தன் இடத்தைப் பிறருக்கு விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக இருந்தாள்!
அந்தப் பெண்ணிடம் பேசிய பின்பு எங்களை நோக்கி வந்த தம்பதியினரிடம் வினவியபோது, “மூன்று நிமிடத்தில் சாப்பிட்டு விடுவோம்,மிகவும் பசியாக
இருக்கிறது. சாப்பிடும் போது குடும்பத்தார் வந்தால் உடனே எழுந்துவிடுகிறோம் என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்தோம், மனதில் கொஞ்சமும் கருணை இல்லாமல் முடியாது என்று ஒரேயடியாக் கூறிவிட்டார்கள்! என்னவோ அந்த
இடம் அவர்களுக்கு மட்டும் எழுதிவைத்ததுப் போல பேசுறாங்க! த்தூ..! சுத்தக் காட்டுமிராண்டித் தனம்!” தன் ஆற்றாமையைக் கூறிவிட்டுச் செல்கிறார்!
அவரது மன எரிச்சல், அந்தப் பெண்மணி மீதுள்ள என் அதிருப்தி மேலும் வலுக்கிறது! பொது நியதியை அறிந்து கொள்ளாதப் பெண்ணாக இருக்கிறாளே! இவர்கள் போன்றவர்களின் அர்த்தமற்ற தான்தோன்றித் தனத்தால் பொது இடங்களில் மக்களிடையே வீணாக மன இறுக்கத்தை ஏற்படுத்தித் தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறக் காரணமாகிவிடுகிறார்களே! என்ன மனிதர்கள் இவர்கள்? அநாகரியமானவர்கள்!
மனதிற்குள் வசைபாடிக் கொண்டுக் கூடாரத்தை விட்டு வெளியேறி ஓர் ஒதுக்குப் புறத்தில் நின்று கொண்டு எடுத்து வந்த உணவை மனைவியுடன் உண்ணத் தொடங்குகிறேன்.சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின் உண்ட உணவுத் தட்டை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டுக் கைகளைச் சுத்தம் செய்த பின்பு மணமக்களுக்கு அன்பளிப்புகளை வழங்க மண்டபத்தை நோக்கிச் செல்கிறேன்.மனைவி என்னைப் பின் தொடர்ந்து வருகிறாள்.
என்னையும் அறியாமல் விருந்து மண்டபத்தை ஒரு கண்ணோட்டமிடுகிறேன்.
மண்டபத்தில் இன்னும் பலர் உணவுகளை எடுத்து வருவதும் உண்பதுமாக இருக்கின்றனர்.எல்லாரதது மேசைகளிலும் விருந்தினர்கள் அமர்ந்து மகிழ்வுடன் உண்ணும் அரிய காட்சியைப் பார்க்க முடிகிறது ஆனால், அந்தப் பெண்மணி அமர்ந்திருக்கும் மேசையில் மட்டும் அவரைத் தவிர வேறு யாரும் அமராமல் காலியாகவே இருந்தது!
அங்கு செல்லும் எவரையும் இருக்கையில் அமரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எல்லோரும் மகிழ்ச்சியானச் சூழலுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் திருமணத்திற்கு வந்திருந்த வருகையாளர்கள் கவனமுடன் நடந்து
கொண்டனர்!
உணவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வரிசையிலுள்ள விருந்தினர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்திருந்தது! உணவை உண்டவர்கள் மணமக்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்!
அந்தப் பெண்மணி மட்டும் இன்னும் உணவு உண்ணாமல் இருந்தது வியப்பாக இருந்தது! உணவுக்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் நபர்களில் அந்தப் பெண்மணிக்கு வேண்டிய குடும்ப உறுப்பினர்களாக நிச்சயம் இருக்க வேண்டும்.
அந்தப் பெண்மணியின் முழுப்பார்வையும் வரிசையில் சென்று கொண்டிருக்கும் நபர்களின் மீது முழுமையாகப் பதிந்திருந்தது!
முற்றியது
முற்றியது