சங்கே முழங்கு

ஊர் கூடி
வடம் பிடித்து
தேர் இழுத்த தேசத்தில்
ஊர் கூடி
மதுக் குடித்து
அரசாங்கத்
தேர் இழுக்கிறார்கள்.

வயிற்றுக்கும், வாய்க்கும்
அரிசியை-
அரசாங்கமே தரும் அதிசயம் !

”பாரு”க்குள்ளே
உள்ள நாடு-
எங்கள் ”பார்” புகழும்
தமிழ்நாடு!.

ஊருக்கு ஊர்
பள்ளிக்கூடம் திறந்தவன்
இங்கே தோற்றிருக்கிறான்.
வீதிக்கு வீதி
பார்களைத் திறந்தவர்களோ
அரியணையில் வீற்றிருக்கிறார்கள்.

முத்தமிழோடு
போதைத்தமிழும் சேர்ந்து -
நான்கு தமிழாகியது.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ் வளர்த்தோர்!

ரிசர்வ் பேங்க் கவர்னரே-
பிராந்திக் கடைக்கென்று
தனியாக நோட்டு அச்சடியும்-
காந்தி படம் இல்லாமல்!
அந்த மகாத்மாவின் மனம்
சாந்தியடையும்.

இந்தக் குடி உயர்ந்துதான்
கோன் உயர வேண்டுமா ?

இங்கே –
ரேசனில் அரிசியும்
டாஸ் மாக்கில்
எமனும் இலவசம்.

படிக்கக் காசில்லையென
மகனுக்குக் கவலை.
குடிக்கக் காசில்லையென
அப்பனுக்குக் கவலை.
இவன்களைபற்றி
எவனுக்குக் கவலை ?

அப்பன்
குடித்துக் குடித்து
மரித்துப்போக-
படிக்கும் பிள்ளைக்கோ
மடிக்கணிணி இலவசம்.
கண்களை விற்று
சித்திரம் வாங்கும்
விசித்திர பூமி.

புத்தனும் காந்தியும்
பிறந்த பூமியாம் –
சத்தியம் பண்ணினாலும்
பயித்தியம் கூட நம்பமாட்டான்.

ராமனுக்குக் கோயில்கட்டக்
கல் எடுத்தவர்களே – இந்த
சாத்தானுக்கு சமாதிகட்ட
கல் எடுப்பீரா ?

ஓடாத தேரை
ஓட வைப்போரே-
மூடாத பாரை
மூட வைப்பீரா ?


சாராயம் வித்தவனெல்லாம்
சரஸ்வதியை விற்கிறான்.
சர்க்காரோ சாராயம் விற்கிறது.
விரைவில் பெண்ணுறுப்பை
விற்றாலும் வியப்பில்லை இங்கு.
அரசுக்குத் தேவை- வரவு.
தமிழன் வீட்டில்-
எய்ட்ஸ் வந்தால் என்ன ?
எழவு வந்தால் என்ன ?

வெளிநாட்டு மதுவாம்
உள்நாட்டு மதுவாம்-
கழுதை விட்டையில்
முன் விட்டை வேறு
பின் விட்டை வேறா ?

இது-
மதுகொடா தேசமல்ல.
மதுகோடாக்களின் தேசம்.

குடி கொடிது –
பாட்டிலில் எழுது.
புகை கொடிது-
பாக்கெட்டில் எழுது.
எய்ட்ஸ் கொடிது-
காண்டத்தில் எழுது.
அரசியல் சாக்கடையில்
குளித்தெழுந்த பன்றிகளால்
வேரென்ன முடியும்.

அரசின் கட்டுப்பாட்டில்-
மூவாயிரம் கோயில்களும்,
ஆறாயிரம் பிராந்திக் கடைகளும்.
வாழ்க தமிழ்!
வாழ்க நற்றமிழர்!

கவலை வேண்டாம் தமிழா-
காப்பீடு இருக்கிறது-
குடிதுக் குடித்துக் கெட்ட குடலை
வெட்டி எடுக்க !
ஆனால்-கெட்ட குடியை ??

அன்று-
ஒரு மன்னன்-
கொடிக்குத் தேர் கொடுத்தான்.
இன்றைய மன்னர்களோ-
குடிக்க
பார் கொடுக்கிறார்கள்.
அவன் –பாரி வள்ளல்.
இவர்கள்-
பார் வள்ளல்கள்.

சங்கே முழங்கு!
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மீளாத குடியென்று
சங்கே முழங்கு.

எழுதியவர் : உதயன் (7-Oct-12, 12:18 am)
சேர்த்தது : udhayansbr
பார்வை : 246

மேலே