'அகதிகள்' வார்த்தை குறித்து வைரமுத்துவின் திடீர் பாசம்...! ஈழதேசம் பார்வையில்..!

'அகதிகள்' வார்த்தை குறித்து வைரமுத்துவின் திடீர் பாசம்...! ஈழதேசம் பார்வையில்..!

நீர்ப்பறவை படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளாராம் கவிஞர் வைரமுத்து அவர்கள்.

" மலைச் சொட்டு மண்ணில் விழுந்தால்
மண்ணகம் அதை மறுப்பதில்லை

இன்னொரு மனிதம் உள்ளவரைக்கும்
இங்கு யாரும் அகதியில்லை " என்று.

இந்த அகதி என்ற வார்த்தைக்குத் தான் இவ்வாறு விளக்கம் கூறியுள்ளார் திரு.வைரமுத்து அவர்கள். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களாகட்டும் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்ல வேண்டாம், இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள் என்று அன்பு கட்டளை ஒன்றை விடுத்துள்ளார் கவிஞர் அவர்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் 'அதிதி' என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி என்று பொருள். நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்த வேண்டும். திரும்பிப் போய்விடுவார்கள்.

மேலும் தமிழ் நாடு அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றையும் சந்தாடி சாக்கில் விட்டார் இவ்வாறு. இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக் கூடாது. அவர்கள அதிதிகளாக, அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

ஆக, அதிதிகள் என்று இனிமேல் சொல்ல வேண்டும் என்கிறாரா..? விருந்தாளிகளாக நடத்த வேண்டும். திரும்பிப் போய்விடுவார்கள். தற்பொழுது இலங்கை அகதிகள் நரிக்குறவர்களை விட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். எவ்வாறு எனில். அவர்கள் சுதந்திரமானவர்கள், இவர்களோ எங்குமே செல்ல சுதந்திரம் அற்றவர்கள். போலீஸ் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டும் அதுவும் லஞ்சம் கொடுத்து. கடந்த அரசை நடத்திக் கொண்டிருந்த இவரின் அன்புத் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது ஏன் கூறவில்லை இந்த நற்செய்திகளை..? அட...ஒரு வசதியும் செய்து கொடுக்கக் கூட வேண்டாம். போலீஸ் தொந்தரவு என்ற ஒன்றை இல்லாமல் செய்திருக்கலாம் அல்லவா..?

ஒருவேளை இப்பொழுதுதான் இந்த வார்த்தைகளை படித்திருக்கிறாரா..? தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் விருந்தாளிகள் என்றால், ஒரு விருந்தாளி வரும் வீடும் அவரைப் போலத்தானே இருக்கும்..? தொண்டு நிறுவனங்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர் அவர்கள் என்று தான் நமக்கு விளங்கவில்லை..? தொண்டு நிறுவனங்கள் அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு ஏதேனும் தொண்டுகளை செய்து கொண்டிருப்பதால் இருக்குமோ..?

இன அழிப்பும், கொடும் துயரங்களும், மனித பேரழிவுகளும் இவர்களுக்கு கவிதையாக, அனுபவமாக, காவியமாக இருக்கிறது போலும்..கவிதை எழுதவும் புதிய சொற்களை கண்டுபிடிப்பதற்கும், வழக்கில் இல்லா சொற்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும் என்று கருதலாமா..?

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Oct-12, 4:16 pm)
பார்வை : 313

சிறந்த கட்டுரைகள்

மேலே