மனைவிக்கு ஒரு தாலாட்டு.!

மாசறு பசும் பொன்னே
மாதரசி இனிய கண்ணே
மடியில் வைத்து தாலாட்டுவேன்
நான் தான் இனி உன் அன்னை.!

மஞ்சுளம் மணிமலரே
மஞ்சகம் வெண் மனமே
பிஞ்சு விரல் சொடுக்குவேன்
நெஞ்சில் வந்து தூங்கு.!

சென்ம சென்ம உறவே
செண்பகப் பூ அரும்பே
செய்கடன் செய்திடுவேன்
செல்லக் கிளியே நீயுறங்கு.!

தமரைப்பூ பாதம் தொட்டு
தங்க ரதமே வருடிடுவேன்
தாலவட்டம் விசிறிடுவேன்
தாரகையே இமைத் தாழ் மூடு.!

கரும்புரவி வால் நிகர்த்த
இடை தாண்டி ஊஞ்சலாடும்
உன் கேசம் கோதிடுவேன்
கோமளமே கொறுக்கை விடு.!

கொஞ்சிடும் கொலுசொலி பூட்டி
கொள்ளையிடும் வளையொலி கட்டி
கொடிமுந்திரி கண்ணுருட்டாது
கொற்றவியே கண்ணுறங்கு.!

வாழும் வரை வங்கணம் குறையாது
வயோதிகத்திலும் கடுஞ்சினம் கொள்ளாது
வற்றாத அன்பை பொழிந்திருப்போம்
ஆற்றாமை கொள்ளாமல் அயர்ந்துறங்கு.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Oct-12, 8:20 am)
பார்வை : 574

மேலே