33.ஆதலினால் காதலித்தேன்..! பொள்ளாச்சி அபி

கடலுக்குள் உனை மூழ்கவைத்து
உயிர்மூச்சை திணறவைத்து
உயிரெடுக்கும் வித்தையென
அவர் கற்றிருக்கலாம் தோழா..! -நீ
தேக்குமரக்கட்டையடா தோழா..!-உனைப்
பற்றியவரும் பிழைப்பாரடா தோழா..!
----பொள்ளாச்சி அபி------
வரலாறுகளிலும்,புதினங்களிலும் எத்தனையோ போராளிகளைக் குறித்து வாசித்திருக்கிறேன். பிரேமாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் எனக்குத் தெரிந்தது.இதுவரை கம்பெனியில் பிரேமா பெண்களிடையே ஆற்றிய பணிகள் குறித்து ஒவ்வொன்றாக நினைவூட்டிக் கொள்கிறேன்.இதுவரை இல்லாத அளவு இப்போது பிரேமா மிக,மிக அழகாய் இருப்பது தெரிகிறது. எனது காதலின் விஸ்தீரணம் மேலும் பரவலாயிற்று. மெதுவாய் பிரேமாவின் கைகளோடு எனது கையை கோர்த்துக் கொள்கிறேன்.
“அப்புறம்..” இம்முறை நானே முந்திக் கொண்டு கேட்டேன்.
“அப்புறம் என்ன.?.இருவருக்கும் ஏற்ற வேலைகளை இருவருமே தேடுவோம்.”
“அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை.நாம் சந்திக்கவும் பேசவும்தான் சற்று கடினமாக இருக்கும்.இப்போது போல கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்க முடியாதல்லவா.?”
பிரேமாவுக்கும் அது குறித்த ஆழ்ந்த யோசனை இருப்பது தெரிந்தது.
உண்மைதான்..,நானும் ஏற்கனவே இது குறித்து யோசித்தேன்.வாய்ப்பிருக்கும் போது,எப்போதும் போல,எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.புதிதாக இனி வேலைக்குச் செல்லும் வரை வீட்டில்தானே இருப்பேன்.”
“நல்லது.அப்படியே செய்வோம்.”
பிரேமாவின் வீட்டிற்கு மாதம் ஒரு முறையாவது சென்று வருவது என்பதும்,எங்கள் வீட்டிற்கு பிரேமாவும்,தோழிகளும் அவ்வப்போது வந்து செல்வதும், கடந்த வருடங்களில் மிகச் சாதாரண மாயிருந்தது.இனியும் அதுபோலவே இருந்து கொள்ளவேண்;டும்.தப்பித் தவறிக்கூட,பிரேமா வீட்டில் இருப்பதால் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு வருவதாக யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது.
பேசிக் கொண்டே மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்.சாப்பிட அமர்ந்திருந்த நேரத்தில்,இன்றைக்கு நம் தொழிலாளிகள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஆலோசித்தீர்களா.?
உம்..அது குறித்து ஆலோசிக்காமல் என்ன.? எல்லாரும் எப்போதும் பற்றாக்குறையான வாழ்வையே இதுவரை நடத்தி வந்துவிட்டார்கள். தற்போது வைத்த கோரிக்கைகள் நிறைவேறினால், அவர்களின் பொருளாதாரம் சற்றே உயர்ந்து, ஆசுவாசமான வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும். அதற்காக கொடுக்கப்பட்ட பலிதான் நாம் இருவரும்..., ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை,நூறுபேருக்காக ஒருவரை..பலி கொடுப்பதில்லையா அதுபோல..நாம் இருவரும் பலியாக்கப்பட்டிருக்கிறோம்.மேலும்,எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மோடு இணைந்து குரல் கொடுக்கும் முக்கிய நிர்வாகிகளில் இருவர் அமைதியாய் இருந்ததில்..ஏதேனும் அர்த்தம் இருக்கலாம்.அவர்களும் பலி கடாவாக ஆக்கப்பட்டிருக்கலாம்.”
“அர்த்தம் எனில், லஞ்சம் வாங்கியிருப்பார்களா.?”
“ ஒருவேளை அப்படியும் இருக்கலாம்.எனினும் நிச்சயமாகத் தெரியாமல் நாம் அப்படியும் சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.தொழிலாளர்களுக்கு போதுமான அளவு வர்க்க சிந்தனை குறித்தோ, முதலாளித்துவ அரசியல் குறித்தோ போதுமான பயிற்சியளிப்பதில்,நாம் தோற்றுவிட்டோம். ஓவர்டைம் வேலை பார்த்தால்தான், வாரக் கடைசியில் மளிகைக் கடையில் கடன் சொல்லாமல் இருக்கமுடியும் என்ற நிலையில் இருப்பவர்களிடத்தில்,அரசியல் வகுப்புக்கும், தொழிற்சங்க சார்பு நடவடிக்கைகளுக்கும் நாம் எங்கே அழைத்துச் செல்லமுடியும்.?.
ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கையிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து,அவரவருக்கு ஏற்படும் அனுபவமே அவர்களுக்கு பயிற்சியாகும். அப்போது,நாம் இதுவரை சொல்லியவற்றை ஏனைய தொழிலாளர்கள் நிச்சயம் நினைத்துப் பார்ப்பார்கள்.அந்த அனுபவம் கிடைக்காதவரை அவர்கள் அறியாமையில் இருப்பதாகத்தான் நாம் கொள்ளவேண்டுமே தவிர,அவர்கள் நமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக,நாம் எப்போதும் நினைத்துவிடக்கூடாது.!”
“உண்மைதான்..” பிரேமாவின் குரலிலும் ஆதங்கமில்லாத ஆமோதிப்பு தெரிந்தது. சாப்பிட்டு முடித்தபின்,பிரேமா வீட்டின் தெருமுனைவரை சென்று விட்டுவிட்டு,விடைபெற்றேன்.
அதற்கடுத்த இரண்டு வாரங்களில்,பிரேமாவிற்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், என்னை அந்தப்பகுதியில் உள்ள எந்த நிறுவனமும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயாராயில்லை. காரணம்,முன்னர் பணியாற்றிய கம்பெனியில் நடைபெற்ற யூனியன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும்,அப்பகுதியிலிருந்த அனைத்து நிறுவன உரிமையாளர்களும் அறிந்தே வைத்திருந்தார்கள்.
நான் பணியாற்றிய கம்பெனியில்,சம்பள உயர்வுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்ற போதெல்லாம்,மற்ற கம்பெனித் தொழிலாளர்கள் கேட்காமலேயே,அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.முதலாளிகள் அந்த அளவிற்கு “மிக நல்லவர்களாக” இருந்து வந்துள்ளனர்.காரணம்,அவர்கள் கம்பெனியில் தப்பித்தவறிக்கூட யூனியன் என்ற ஒன்று வந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிக உறுதியாகவும் இருந்தனர் என்பது,நான் வேலைக்காக அலைந்தபோது,அங்கிருந்த தொழிலாளர்கள் சொன்னதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
“அட..,கரையில் விழுந்த விதைகள் காற்றில் இழுத்துச்செல்லப்பட்டு,நதியில் கலந்து, கண்ணுக்குத் தெரியாத பல இடங்களில், கரையொதுங்கி முளைத்து செடியாகவும், மரமாகவும் வளர்ந்திருக்கிறதே.., இது மிக நல்ல விஷயமல்லவா.?
நாம் நேரடியாக சிலருக்கு உதவப் போக,அந்தச் செயல்..,மறைமுகமாக எத்தனை தொழிலாளர்களுக்கு உதவியிருக்கிறது.‘ போதும், போதும்..எனது வயதுக்கு,வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்த்துக் கொள்ள இந்த சாதனை யொன்றே போதும்.!’ நெஞ்சு பெருமிதத்தால் விம்மியது.
இனி எங்கள் பகுதியில்,எனக்கான வேலை கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. இனி அடுத்த கட்;டமாய் என்ன செய்வது.?
ஆதலினால் காதலித்தேன் ..! மீண்டும் தொடர்கிறேன்.