புதிய உறவு

அன்புத் தங்கையே!
பழைய உறவுகளைவிட்டு
புதிய உறவை நாடும்
அந்த நேரம்
அதோ வந்துவிட்டது!

உனது அந்த வினாடி - எனது
அந்திம வினாடிபோல
கலவரம் தருகிறது!

வாழப்போகும் உனக்கு
வசந்தகாலம் உறுதி!
கணவன் வீடே உந்தன்
கடவுள் தந்த பகுதி!

பெண்ணென்று நீ ஒருத்தி
பேணி வந்ததினால்
நம் வீடு வீடாகியது,
மகிழ்ச்சி ஒளி வீசியது!

இருபது ஆண்டுகளில்
நீயும் நானும் பேசியது
சிலநூறு வார்த்தைகளோ
என்னவோ!

தொலைவில் ஒலிக்கும்
ஆலயமணியாய்
அரைகுறையாய்
அதன் நினைவுகள்!

பிறந்ததும் பிரிபவர்கள்
உண்டு! ஆனால்
பிரிவதற்கென்றே
பிறந்தவன் நான்!

குறைந்த நாட்களே
குடும்பக் கூட்டுக்குள்!
இறக்கை முளைக்கும் முன்பே
பறப்பதாய் எண்ணி ஓடியவன்!

வாமன அவதாரம்
காலால் அளந்த பூமியை
ரயிலால் அளக்கிறேன்! அதனால்
என் குடும்பம் இழக்கிறேன்!

நீ சமைத்துப் பரிமாறி
ரசித்து சுவைகூடி
உண்ணும் பாக்கியம்
இன்னும் உளதோ என்னவோ!

தும்பை விட்டு விட்டு
வாலைப் பிடிக்கிறேன்!
உன் அன்பை விட்டு விட்டு
இன்று காலைப் பிடிக்கிறேன்!

கப்பல் செய்யும் சிறுவயதில்
"கார்த்திக்கு கத்திக்கப்பல்
செய்யத் தெரியும்" என்றாயே
அதுதான்
நீ பேசியதாய் என்
முதல் நினைவு!

எழுதியவர் : subapriyan (16-Oct-12, 9:41 pm)
சேர்த்தது : subapriyan
Tanglish : puthiya uravu
பார்வை : 119

மேலே