மரணத்தின் முகவரி

மரணத்தின் நிறம் என்னவென்று
கடவுளிடம் கேட்டேன்
வண்ணத்து பூச்சிகளுக்கும்
வருகின்றதென்பதால்
அது அவசியமில்லாதது என்றார் .

மரணத்தின் வயது பற்றி கேட்டேன்
எப்போதும் யாருக்கும் என்ற
கொள்கையின் அடிபடைலானது
என்பதால் வயதும்,வயதெல்லையும்
அதற்கில்லை என்றார்.

மரணத்தின் நோக்கம் கேட்டேன்
வயோதிபர் மடங்கள் சென்று பார் என்றார்.
அப்படியானால் இளம் வயதினர்களுக்கும்
அது ஏன் என்றேன்
உயிரின் பெறுமதியை மனிதன் உணர
நிச்சயிக்கப்படும் எமது விலை என்றார்.

மரணத்தை வகைகள் கேட்டேன்
பஞ்ச பூதங்களிடம் கொடுத்தது போக
எஞ்சி இருப்பதை பயங்கரவாதிகள் ,
படையினர் , அரசியல்வாதிகள்,
கொள்ளைக்காரர்கள் ,வைத்தியர்கள் .
வைத்தியசாலைகள் .மதுபானம்
தனியார் பாடசாலைகள் .வாகனங்கள் ,
குடும்பச் சண்டைகள் ...இப்படி பட்டியல் நீளுமென்றார்.

ஓய்வு என்று ஒன்றில்லையா என்றேன்
எமனின் நாற்காலிக்கு மூட்டை பூச்சிகள்
மட்டுமல்ல உங்கள் அரசியல் வாதிகளும்
பயப்படாத நிலைதோன்றட்டும் பார்க்கலாம் என்றார்,

படைத்து மரிக்க விடுவதைவிட
படைப்பதையே விடலாமல்லவா..
நான் முடிப்பதற்குள் அவரே தொடர்ந்தார்..
பிரமனுக்கு தொழிலில் அலுப்பு தட்டட்டும் என்றார்

இது சாத்தியபடுவது எப்போது என்றேன்
பிரமனின் கோப்பு எமனின் கைக்கு
கிடைக்கும் போது பார்த்து சொல்கிறேன் என்றவர்
அடுத்து நீ என்ன கேட்ட்கபோகிறாய் என்று
எனக்குத்தெரியும் என்று
கவுண்டமணி செந்திலை பார்ப்பதைபோல் பார்த்தார்

நல்ல வேளை கடவுள் பார்வையோடு
விட்டுவிட்டார்.
இல்லாவிட்டால் என் மரணத்தின்
முகவரியை கையில் வாங்கிக்கொண்டு
உயிரை கொடுத்துவிட்டு வந்திருப்பேன் நான்,

எழுதியவர் : மெய்யன் நடராஜ்-- இலங்கை (26-Oct-12, 5:47 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 166

மேலே