உயிர் தமிழுக்கு!

கவிக்கு உயிர் ஈவேன்
. கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப்
. பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல்
. தனில் ஓசை கூட்டியொரு
கவியென் றுயிர்கொண்டு
. காற்றில் இழைந் திடுவேன்

மடித்தே எனதுடலை
. மாகடலில் எறிந்திடினும் ]
அடித்தே எழும் அலையில்
. ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத்
. தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை
. பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்

வெடித்துச் சிதறவொரு
. வானிருந்து போடும்பொதி
அடுத்தென் அருகிலிடி
. ஆகாயம் வீழ்ந்ததென
பொடித்தே உடல் சிதறப்
. பூகம்பமாய் வெடித்தும்
நொடிக்குள் கவிபாடி
. நிம்மதியாய் செத்திடுவேன்

செழித்த சோலையிலே
. சிங்காரக் குருவிகளும்
களித்து குலவ அதைக்
. கண்டு கவிபாடிடுவேன்
குளித்தே எழும்குளத்தில்
. குமுதமுடன் அல்லிமலர்
விளித்துகிடப்பதனை
. விரும்பக் கவிபடிப்பேன்

நெளிந்தே சிறுநாணல்
. நிலத்தை வணங்கிடினும்
தெளிந்த உரமெடுத்துத்
. தேக்குமரம் நின்றிடினும்
புளித்த மா தருவும்
. பின்னாலே ஆலமரம்
அளிக்கும் எழில்கண்டு
. ஆடியேநான் பாடிடுவேன்

தோகை மயில் விரிக்க
. துவானம் நீர்தெளிக்க
நாகம் படமெடுக்க
. நாரைகொளத் தவமிருக்க
பூகை யேந்தியொரு
. பெண்ணொருத்தி மலர்சூட
ஆகா அழகென்றே
. ஆனந்தப்பாட்டிசைப்பேன்

வடித்துக் கொடுப்பதவள்
. வாரித் தெளிப்பதிவன்
குடித்துக் களிப்ப மனம்
. கூடிக்கிடப்ப துளம்
துடித்துக் கிளம்பி உயிர்
. தேகம் அடங்கும்வரை
நடித்துக் கவிதை சொல்லி
. நாட்டியங்கள் ஆடிடுவேன்

தேனைக் கவிவடிக்கத்
. தென்றலதி லேறியுயர்
வானை க்கடந்தோடி
. வானவரின் நிலமேகி
சேனை படைஎதிர்த்து
. சிரம் கொள்ளவந்திடினும்
ஞானபழம் தருவாள்
. நலம்வேண்டி வென்றிடுவேன்

ஓடைமலர் பூக்கும்
. ஒளிவெள்ளம் பூமிகொளும்
ஆடை விரித்த அலை
. அசைவதிலே அழகூறும்
கூடை மலர் கவிதை
. கொண்டுலகின் சக்தியவள்
ஏடு எழுதவைத்தாள்
. இறையவளைப் போற்றிடுவேன்

எழுதியவர் : கிரிகாசன் (1-Nov-12, 4:03 am)
பார்வை : 258

மேலே