நமக்கும் உண்டு இனவெறி

---- நமக்கும் உண்டு இனவெறி ---

தேச தலைவர்களாக
தெரியப்பட வேண்டிய
தெய்வ சிலைகளெல்லாம்
தெருக்களின் இடுக்கில்
தேம்பி அழுகிற
திருவிழா நடக்கிறது
நம் ஊரில்...

கல்லெறிபட்டு செத்துக்கிடக்கும்
கல்லறை பிணங்களை
கணக்கெடுத்தால் இனக்கலவரம்.

தமிழர் ஒற்றுமை எண்ணியபோது
தடதடவென கண்ணில்
தண்ணீர்பெருக்க கனமழைவரும்.

சுத்தமான தங்கம்
ஐயா முத்துராமலிங்கம்
நீ
முளைத்த நாள் இந்துவம்
குடித்த பால் இஸ்லாமியம்
படித்த பள்ளி கிறித்துவம்
ஒருமைப்பாடு உன் தத்துவம்....

வெறியாட்டத்தின் வெளிப்பாடாக
உன்னை கொண்டாடும்
உரிமை இழந்து நிற்கிறது
ஊருக்குள் பெருங்கூட்டம்.

உன் கர்ஜனையில்
காது கிழிந்த
ஆங்கில அரசு
அறிவித்தது வாய்பூட்டு சட்டம்.

உன்னை அர்ச்சனை செய்ய
புறபட்ட கூட்டம்
கொடுத்தது
உனக்கு சாதி தலைவர் பட்டம்.

இனவெறி கொலைகள்
தினசரி நிகழும்
ஊரில் ஏனோ பிறந்துவிட்டேன்...

அனுசரிக்க மறுத்தவன்
கழுத்தை அறுக்கும்
நரிகளோடு தானே இருந்துவிட்டேன்....

சாதிக்கும் இளைஞர் திரட்டி
போதிக்கும் ஆசானாக
வாழ வேட்கை செய்துவிட்டேன்.

சாதிக்கு இளைஞர் திரண்டு - அவர்
சாவுக்கு பிரிவினை கண்டு
நானே இயற்கை எய்திவிட்டேன்.

எங்கள் அண்ணன்
இனவெறி பிடித்து
இப்படி இருக்கையில்

சிங்கள மன்னன்
முகத்திரையை
எப்படி கிழிப்பது ?

இனி எப்படி சொல்வேன்
பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும்
எங்கள் வயிற்று பிள்ளையென....

உலகின் உச்சியிலமர்ந்து
எப்படி உரைப்பேன்
எங்களுக்கு சாதி இல்லையென...

கலவர கல்லெறியில் செத்த
இனவெறி இதயங்கள்
வீடு வருமென
ஏங்கி காத்திருக்கும்
பிள்ளதாச்சிகளின்
பிராத்தனைகளுக்கு
இக்கவிதை சமர்ப்பணம்.


----- தமிழ்தாசன் -----

எழுதியவர் : தமிழ்தாசன் (31-Oct-12, 5:11 pm)
பார்வை : 206

மேலே