தாகம் தாகமே தண்ணீர் பெறும் வரை

என்னோடு சேர்த்து
வெளியே சொல்லப்படும் எம் சாவுச் செய்தி
என்னையே சிரிக்க வைக்கிறது.

உலகமறிந்திடாத உன்னத வீரத்தின்
ஆணிவேர்,
எம் நிலத்தின் மாந்தர்கள்
அவருக்கென பெய்யும் கார்த்திகை மழை!

விடி வாசல் தேடும் எம் போராட்ட தேர்
புதையுறும் போதெல்லாம்,
உயிர் விட்டு வடம் பிடித்த தேச மாந்தர்கள்.

அவர்கள்
திமிர் கொண்டு வந்த பகை நெருப்பை
பிணமாக்கி,
வழிகலந்த தேசத்தின் புயல்கள்,
எம் உயிர் காத்த கல்லறைக் கடவுள்கள்!

அருகிருந்தும் ஒன்றாய் புசித்தும்
ஒரு வழி நடந்தும்,
பகை வீழ்த்தி முன் மடிந்த
என் தோழனுக்கு இந்நாள் விளக்கேற்ற
அவன்
விதை குழியை தேடியும்,
காணாது,
கண் கலங்கி
நிற்பதில் பயனில்லை.!

நெஞ்சத்தில் எரியும் தீ
நெய் விளக்காகும்!
மழையடிக்கும்,
எம்முறுதி குடை பிடிக்கும்,
விதை குழியினுள்,
வாழும் குலம் காத்த
தெய்வங்களுக்கு
கண்ணீரால் பூசையில்லையென. . . !

தேசத்தின் பெரும் சுமையை
தணலாக்கி எரித்தவர் எண்ணி
அவர்தம்
கரு சுமந்த தாய் கூட கண்ணீர் வடிக்கமுடியாதல்
கொடியதில் கொடியது,
சாவினில் சாவது .

கயவனின் காலடியில் கருவிழக்கும்
என் தேசத்தில்
தன் மகவு நினைத்து கண்ணீர் விட்டால்
அன்றே அழுத தாய் உடல் கிழிக்கும்
கொடும் கயவர் கருப்பறிக்கும்!

நினைத்து பாருங்கள் !
இருட்டிற்கு விளக்கேற்றினாலே
மிரட்டும் வாழ்விருக்க,
நாட்டிற்கே விளக்கேற்றும் நாள் வருதல். . .!

தோழா !
வீழ்ந்தவர் சூட்டில் குளிர் காயும்
உந்தன் விளக்குகள் அவர்க்கு வேண்டாம்,

நீ எழு இனியேனும்
போர்வை விலக்கு துணிந்து கொண்டு .
"கடல் வத்துமென்று காத்திருந்து
குடல்வத்தி செத்ததாம் கொக்கு"
நீ இயங்க எவரின் வருகையும் தேவையன்று
நீ இயங்கு ,நீ இயக்கு ,பகை முடக்கு !

இடைவேளைக் காலம்
இப்போது
சத்தமில்லை,
வீழ்ந்தவர் எண்ணி மனத்திலே பூசுதல்
மேன்மை இப்போது,
வந்தவன் ஓட அந்த நாள் வருமே!
அன்றே ஏற்றுவோம்தீபங்கள் .

தவித்த வாயடங்க தண்ணீர் தான் பருகவேணும்
தாகம் தாகமே தண்ணீர் பெறும் வரை .!

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (4-Nov-12, 2:53 pm)
பார்வை : 374

மேலே