ஒய்வு... மறு பதிவு...

ஒய்வு (அரசுப் பணியில்)
உடையாமல் உருக்குலையாமல்
அடைகாத்த முன்னேற்ற முட்டைகளை
உங்கள் வசம் ஒப்படைத்து
விடை பெறுகின்றேன் !
பொரித்த குஞ்சுகளின் அசைவில்
தரிசனமாவேன் நான்!

பலர் இதுவரை
மழையாய் -
மண்ணிலமாய் நான் !;:
மோதும் அலையாய் பலர்-
நிலைகடலாய் நான்;!
வாசமிகு மலராய் நான்-
சூட்டிக்கொண்ட
தோள்களாய் பலர்!

இனி ,
துள்ளியாடும்
புள்ளிமான்களோடு
கூடி ஆடலாம்!

ஆசைப்பிள்ளைகளின்
யானையாகலாம்!

இறந்த கோப்புகளுக்கு
உயிரூட்டிய காலம் போய்

உயிருள்ள செடிகளுக்கு
உரம் வைக்கலாம்!

வண்ணபொடி அஸ்தமன
சிதறல்களை கடிகாரம்
இல்லாமல் கண்டுகளிக்கலாம்!

விரல் நுனிப்பற்றி
மகளோடும் மனையாளோடும்
மழைப்போர்வையில் வீதிகளில்
குதிநடைப் பயிலலாம்!

எழும்பும் நிலவைத்
தழும்பாய் மறைக்கும்
மேகத்தோடு சேர்த்துக்காணலாம் !

நரையும்,திரையும் பின்னலிட்ட
தாய் தந்தையோடு குசாவலாம் !

வேட்டி நுனிப்பிடித்து
ரேஷன் வாங்கிட
கை வீசி சனிக்கிழமைகளை
வரவேற்க்கலாம்!

கோப்புகளின் குவியல் இன்றி
யாப்பு பற்றி யோசிக்கலாம் !

யாழிசை கலந்த ஏழிசையை
ஏகாந்தமாய் ஞாயிறுகளில்
ரசிக்கலாம்!

மீட்டாமல் விட்டுவைத்த
வீணையை மீட்டிப்பார்க்கலாம்
தூசிதட்டி!!!!!

ஆனாலும் அறுபது என்பது
இரண்டாவது குழந்தைப்பருவத்தின்
தொடக்கம் என்பதை உணருங்கள்!

அறுபதிலும் எனவே தான்
வருகிறது ஆசை!!!

எழுதியவர் : புதுவை காயத்திரி (4-Nov-12, 3:00 pm)
பார்வை : 252

மேலே