மரங்கள் (கட்டுரை)

மரங்கள் இந்த பூமியின் வரங்கள்!

மரங்கள் மனிதர்களுக்கு எவ்வளவோ வரங்களை வாரித்தருகின்றன.மனிதர்கள் நாம் என்ன செய்கிறோம்? சாலை மேம்பாடா? மரங்களை வெட்டு:சாதிப் பிரச்சினையா? மரங்களை வெட்டு.வீடு கட்ட வேண்டுமா? மரங்களை வெட்டு.என்று ஒவ்வொன்றுக்கும் மரங்களை வெட்டி இந்த பூமித்தாயின் மேனியெங்கும் வறண்ட சருமமாய் அல்லவா ஆக்கிவிட்டோம்!

நன்கு வளர்ந்த ஒரு மரம் ஒருநாளில் ஒன்றரை டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறதாம்.முன்பெல்லாம் சாலை ஓரங்களிலும் கடற்கரைகளிலும் நிறைய மரங்களை வளர்த்துப் பாதுகாத்தார்கள்.அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது .சாலை ஓரங்களில் வாகனங்கள் மூலம் நிறைய கார்பன் டை ஆக்சைடு உண்டாகும்.அவற்றை உறிஞ்ச மரங்கள் தேவை என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர் .

அதே போல் கடற்கரை ஓரங்களில் சவுக்கு போன்ற கெட்டியான மரங்களை நட்டு கடல் கொந்தளிப்பில் இருந்து தங்கள் ஊர்களையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.ஆனால் சமீபத்தில் வந்த சுனாமியின் போது நம்மால் என்ன செய்ய முடிந்தது? முன்புபோல் சவுக்கு மரங்களோ ,தென்னை மரங்களோ இருந்திருந்தால் கடல் நீர் அவற்றைத்தாண்டி ஊருக்குள் வருவது கடினம் என்கிறார்கள் அறிவியலாளர்கள் .

தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினைகளால் நாம் இப்போது பெரிதும் நம்பியிருப்பது சூரிய ஒளி
மின்சாரத்தை.அதற்காக செய்யப்படும் சோலார் பேணல் போர்டுகள் எவ்வளவு செலவு வைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே ! ஆனால்,ஒரு மரத்தை முழுவதுமாக நீங்கள் மொட்டையடித்து விட்டால்கூட இரண்டே நாட்களில் தனக்குத் தேவையான சோலார் பேணல் போர்டுகளைத (இலைகளை)தானே தயாரித்துக் கொள்ளும் அறிவியலை வியந்திருக்கிறீர்களா? அடுத்த முறை இலைகளின் மீது கை வைக்க சற்று யோசிப்பீர்கள்.

இந்த இடத்தில் எழுத்தில் நான் எழுதிய முதல் கவிதையை நினைவுபடுத்த விரும்புகிறேன்!

ஆக்சிகனைக் காப்பாற்ற
அரசமரம் வைத்தார்கள்!
அரசமரத்தைக் காப்பாற்ற
அடிப்பிள்ளையார் வைத்தார்கள்!
இப்போது
ஆக்சிஜனையும் மறந்து
அரசமரத்தையும் மறந்து
பிள்ளையாரை மட்டும்
காப்பாற்றிக் கொண்டார்கள்!

இன்னொரு முறை மரங்களை வெட்டினால் தட்டிக் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்! வாயில்லா மரங்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்?

எழுதியவர் : கோவை ஆனந்த் (4-Nov-12, 4:41 pm)
பார்வை : 4456

மேலே