பகல் இருட்டு துணையிருக்கட்டும்!
உன்னைக் காணும் வரை
என்
வாலிபச் சோலை
பசுமை தழுவிய
வனமாகத்தான் இருந்தது !
உன்னைக் கண்ட பிறகும்
என்
வாலிபச் சோலை
வளர்ந்து பூத்து
வாசமுடன்தான் திகழ்ந்தது !
பொய்யாய்க் கூடிப்
போய் விட்ட மேகங்களைப் போல்
நீ
புறப்பட்டுப் போன பிறகுதான்
பட்ட மரங்களோடு
பாலைவனமாய் நிற்கிறது !
என்
ஞாபகத் தீவைச் சுற்றி
இன்னும் கூட
உன் எண்ணங்கள்தான்
நீராய்ச் சூழ்ந்து கிடக்கின்றன !
என்
நாவினில் இனிக்கும்
சீனிப் பாகாய்
இன்னும் கூட
உன் பெயர்தான்
உச்சரிப்பு வடிவில்
ஒட்டி இருக்கிறது !
என்
இதயப் புல் வெளியில்
பூத்த பனித்துளியே !
காலம் மாற்றிய
காலைப் பொழுதினில்
ஆவியாய்ப் போனாய் !
மெல்லிய தென்றல்
ஆளைத்
தள்ளிடும் புயலாய்ப்
போனாலும்
மீண்டும் இந்த
மேடையில் வீசாமலா
போய்விடும் ?
நிலவைப் போல
இன்னுமோர் இரவில்
நீ வரும் வரைக்கும்
இந்தப்
பகல் இருட்டு
உன்னைப் போலவே
என்னோடு
துணையிருக்கும் !