சின்னப் பெண் செல்லம்மா

சின்னப் பெண் செல்லம்மா
சந்தைக் கடைக்குப் போனாள்
அன்னம் போல நடந்தே
மந்தை மாடு பார்த்தாள்
என்ன வாங்கித் தின்னலாம்
என்று அவள் எண்ணியே
முன்னம் பார்த்த கடையிலே
முறுக்கு வாங்கித் தின்றாள்.

சின்னப் பெண் செல்லம்மா
சந்தைக் கடைக்குப் போனாள்
சிறிய மீனை வாங்கியே
சீனாக் கிண்ணத்திலிட்டாள்
முகத்தைக் கையில் தாங்கியே
மூன்று மணி நோக்கினாள்
‘செல்லம்’ எனச் சொல்லியே
சாக் கடையில் விட்டாள்.

சின்னப் பெண் செல்லம்மா
சந்தைக் கடைக்குப் போனாள்
சிப்பி மூக்கி கிளியினைச்
செப்புக் காசில் வாங்கினாள்
உப்பு போட்ட நாவப்பழம்
உண்ண அதற்கு ஊட்டினாள்;
சப்புக் கொட்டும் அழகிலே
தப்பித் தவழ விட்டாள்.

சின்னப் பெண் செல்லம்மா
சந்தைக் கடைக்குப் போனாள்
சீறிப் பாயும் சேவலை
சேரப் பிடித்துக் கொண்டாள்
சிவந்த கொண்டை காயத்தில்
சேற்றை பூசி விட்டே
“சண்டை போட வேண்டா” மென
சொல்லிப் பறக்க விட்டாள்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (14-Nov-12, 12:15 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 144

மேலே