வேண்டும்

ஆடம்பரமில்லாத அமர்க்களமான ஓர்
வாழ்வு வேண்டும்.

உள்ளமதிலே இளமை என்றும்
இடைஞ்சல் இல்லாமல்
வஞ்சமின்றி வேண்டும்.

வறுமையற்ற ஆரோக்கியம் ஆயுள்வரை
குறைவற்ற செல்வமாய் வேண்டும்.

பகுத்தறிவால் கயவர்களையும் கண்ணியவான்களையும்
உய்த்தறியும் சக்தி வேண்டும்.

கயவர்களை காறி உமிழும்
துணிந்த நல் மனம் வேண்டும்.

கண்ணியவான்களுக்காய் சிரம் நோக்கி
குவியும் இரு கரங்கள் வேண்டும்.

நியாயத்திற்காய் மட்டும் பணியும்
சிரம் வேண்டும்.

ஜாதி மதங்களை சுட்டெரிக்கும்
ஓராயிரம் மனித சூரியன்கள் வேண்டும்.

எண்ணங்களாலும், நடத்தைகளாலும்
உயர்குலமென்றும், இழிகுலமென்றும்
ஜாதி பிரிவு வேண்டும்.

உடல் ஊனம் போல் , குண ஊனத்தையும்
உருக்குலைந்து காட்டுவதாய் இறைவன்
படைப்பில் திருத்தம் வேண்டும்.

கன்னத்து சிவப்பையும் உடல்
வனப்பையும் உடை அழகையும்
உயர்வென யாசிக்கும் ஆண்களை
சிறப்பாய் கருதும் பெண்குலம்
இல்லாதொழிய வேண்டும்.

அக அழகையும் உண்மை உணர்வையும்
உன்னதமாய் நேசிக்கும் ஆண்மையை
உயிராய், உயர்வாய் சுவாசிக்கும் பெண்மை
ஆயிரமாயிரம் மலர வேண்டும்.

அகத்தூய்மையோடு முகமலரும்
நல்ல நட்புள்ளங்கள் மட்டும்
நட்பாக வேண்டும்.

எழுதியவர் : Ragavi (22-Nov-12, 11:27 pm)
பார்வை : 185

மேலே