கூண்டுகுள் ராகம்- கே.எஸ்.கலை

அம்மா அப்பா செஞ்சி தந்த
சருகு செத்த மெத்த வீடு...
அதுக்குள்ள கிளிப்புள்ள
அலாக்காத் தான் படுத்திருந்தே !

தேனெடுக்க வந்த பய - என
கண்டுப் புட்டு காதல் பட்டு...
கையால பொத்தி என்ன
களவாடிக் கொண்டு வந்தா(ன்) !

கொண்டு வந்த நாள் முதலா
கொஞ்சி கொஞ்சி பழம் குடுப்பா(ன்)...
கொஞ்ச நேரம் தூங்கிப் புட்டா
நெஞ்ஜொடஞ்சி துடி துடிப்பா(ன்) !

பச்ச கிளிக்குஞ்சி என்ன
பெத்த புள்ளப் போல பாப்பா(ன்)...
பச்சக் கொய்யா பழம் குடுத்து
பேசச் சொல்லி வத குடுப்பா(ன்) !

பெத்த தாய பிரிச்சி என்ன
திருடிக்கிட்டு வந்த பய...
மொத்த நேரமும் பக்குவமா
தாயப் போல பாத்துக்குவா(ன்) !

வேலியில்லா வானத்துல
பறந்து திரிய ஆசப் பட்டே(ன்)...
கூலியில்லா வீட்டுக்குள்ள
வாழ நானு வாக்கப் பட்டே(ன்) !

செறகிருக்கு வானமிருக்கு
பறந்து போக முடியலியே...
மரமிருக்கு பழமிருக்கு
கொத்தி திங்க வழியில்லயே !

கூட்டுக்குள்ள பூட்டி வச்சா(ன்)
பாசத்தால கட்டி வச்சான் – அவனுக்கு
திருட்டு தனம் பண்ணிப் புட்டு
பறந்து போக மனசில்லயே...!

எழுதியவர் : கே.எஸ்.கலை (23-Nov-12, 7:23 pm)
பார்வை : 283

மேலே