இலக்கணம் சமைக்கலாம்

முதலில்
எச்சில் கையால்
காக்காய் விரட்டும்
பழக்கத்தை நிறுத்திவிடு

கஞ்சத்தனம் பற்றிய
பாடத்தை
பொருட்செலவின்றி படித்துவிடு

கடன் வாங்கி
காலம் நீட்டி
தவணை முறையில்
கொடுக்கும் பழக்கம்
வளர்த்துக் கொள்

கடன் கேட்பவனுக்கு
இருந்தாலும்
இல்லையென்று கூற
மனசாட்சியை மூடிவை

உன் வேலைக்காரர்களை
நாயிலும் கேவலமாக
நடத்த பயிற்சி எடு

அவர்களுக்கும்
குடும்பம் உண்டென்பதை
அடியோடு மறந்துவிடு

எத்தனை குறைக்க முடியுமோ
அத்தனைக்கு அவர்களுக்கான
சலுகையை குறை

சம்பள பாக்கி வை
விடுமுறை நாட்களானது
வேலைக்காரர்களுக்கு
வேண்டாத நாளென்று
விதி செய்

சுதந்திர அடிமைகள்
என்றொரு முத்திரை குத்தி
உன் கட்டுப்பாட்டில்
வைத்து கண்காணி

என்னதான்
லாபம் வந்தாலும்
நிறுவனம்
நஷ்டத்தில் இயங்குவதாய்
புலம்பிக்கொண்டிரு

வாடிக்கையாளர்களை
விசுவசிக்கவைத்து
வித்தியாசமாய் ஏமாற்று

நண்பர்கள் குறை .
நா கூசாமல் பொய் பேசு
கள்ளக் கணக்கெழுது .
கள்ளனிடமும் களவெடு

பிச்சைக்காரர்களை
வெள்ளிக்கிழமைகளில்
மட்டுமே வரச்சொல்

பேருக்காக
பொதுப் பணிகளில்
அவ்வப்போது தலை காட்டு

சொற்ப நிதியுதவி
செய்துவிட்டு
அதிக விளம்பரம் தேடிக்கொள்

வரவில் மட்டும்
கண்ணாயிரு
செலவை கண்டு
எரிச்சல் படு

மொத்தத்தில்
ஒரு நல்ல
சுயநலவாதியாய்
இருந்து விடு போதும்
உண்மையில் நீ ஒரு
நல்ல முதலாளி
என்பதற்கான
இலக்கணம் சமைக்கலாம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Nov-12, 2:34 am)
பார்வை : 148

மேலே