நான் ஏன் கவிஞனானேன்

-------- நான் ஏன் கவிஞனானேன் ? ------

வர மறுத்தும்
வாலிப கூட்டம்
இருட்டுச் சந்துக்குள்
இழுத்துச் செல்கிறது
அரவாணி அக்காவை....

எதிர்த்து கேட்பதா?
எதுகை மோனை செய்வதா?


குடிநீர் கேட்டு
குடிசை மக்கள்
கும்பிட்டு மனு கொடுக்க....
குளிர்பான கடை திறப்புவிழாவுக்கு
புறப்படுவதாக சொல்கிறார்
ஆளும் கட்சி பிரமுகர்.

கேலி செய்யும் சித்திரம் வரையவா??
கேள்வி கேட்டு கழுத்தை அழுத்தவா?


மரங்கொத்தி சாராய நிறுவனம்
மறுபடி தொடங்க
வட்டியில்லா கடன்
வாங்க சொல்லுது
மத்திய அரசு..
பசித்த பாமர உழவன்
ருசித்த எலிக்கறி குறித்து
எப்படி தெரியும்
ஏகாதிபத்திய அரசுக்கு...

இக்கணம்
சேகுவேரா ஆன்மாவை அணிந்து கொள்வதா?
அனிச்சையாக எழுச்சி பாடல் எழுதி தொலைப்பதா?

கையில் கஞ்சா புகை
கைபேசி ஆபாசபடம்
கணினியில் காதல்
பாழாய் போகும்
பள்ளி வயது இளைஞன்.

சீர்திருத்த பாடல் எழுதுவதா?
சீரழிவுக்கு எதிராக களமிறங்குவதா?

மாசடைந்த காற்றின்
மரண செய்தியை
மை எழுதவா?
மரம் ஆயிரம் நட்டு
மாற்றம் நிகழ்த்தவா?

நெஞ்சில் கவிதை நிரம்ப நிரம்ப
வளையல் ஓசை பரப்பி
காதலி உண்ணும் அழகை
உற்று பார்ப்பதா?

கடைசி பந்தி வரை
கைபிடிச் சோறுக்காக
காத்திருக்கும் பாட்டியை
கவனிப்பதா?

எல்லா சமூக கொடுமைகளும்
என் முன்னே
நிகழ்கிறது.

பாராட்டை பெற்று தரும்
கவிதை எழுத
பேனா எடுக்கவா?

போராட்ட வீரம்
கொட்டிகிடக்கும் நெஞ்சை
தட்டி எழுப்பவா?


----- தமிழ்தாசன் ----

எழுதியவர் : தமிழ்தாசன் (27-Nov-12, 7:24 am)
பார்வை : 238

மேலே