மந்திரச் சட்டை
முன்னொரு காலத்து மன்னவர் ஒருவர்
தன்னலமில்லா தகைமை கொண்டவர்
நன்னியதொரு காலைப் பொழுதினிலே தம்
உடலில் நடுக்கம் எடுக்கக் கண்டார்
“என்னவோ செய்யுது என் தலையை” எனச்
சொல்லிச் சாய்ந்தார் படுக்கை தன்னில்.
ஊரிலுள்ள பெரு மருத்துவர் பலரும்
வந்து பார்த்தவரைப் பரிசோதித்தார்;
பூரித்துலவும் மன்னர் நோய் மூலக்
காரணம் கூறிடத் தவறி நிற்றார்.
“வீரியமானது மன்னரின் நோய்’ என
விளம்பரம் செய்தே பரிசு பெற்றார்.
அடுத்த நாட்டின் மருத்துவர் இருவர்
மன்னரை சிகிச்சை செய வந்தார்
எடுத்துக் கையில் அரசர் நாடியை
எண்ணிப் பார்த்து விழித்து நின்றார்;
கெடுத்து நலத்தினைப் படுக்கையில் தள்ளிய நடுக்கம் ஏனெனென அவர் கேட்டார்.
வயதினில் மூத்த இரண்டாம் மருத்துவர்
விபரந்த் தெரிந்த அறிஞரைப் போலே
“பயத்தினில் மன்னவர் உடம்பு நடுங்கலாம்
வயிற்றினை அரசர் காலி வைக்கலாகாதென
நயத்துடன் கூறி நின்றவரை அரசர்
கடுத்த முகத்துடன் அனுப்பி விட்டார்.
அடுத்து சோதித்த மருத்துவர் ஒருவர்
ஆரூடம் சொல்லும் அறிவாற்றல் கொண்டவர்
உடுத்திய உடைதனை களையச் செய்து
ஊனம் உடம்பில் உளதா பார்த்தார்
எடுத்த எடுப்பில் ஒரு பார்வையிலே
ஏறுக்குட்மாறாய் மனம் இருக்கக் கண்டார்.
”கொடுக்க மருந்திதற்கு தேவையில்லை
கோமகன் கோப உளம் தவிர்ப்பீர்,
ஒடுங்கிப் படுக்கையில் கிடப்பதை விடுத்து
ஓட்டம் ஆட்டம் சில பயின்று வகையாய்
நெடுநாள் இயல்பாய் மகிழ்ந்து திளைக்கும்
மனிதனின் மந்திரச் சட்டை அணிவீர்”
நாட்டிலிருக்கும் மூலை முடுக்கெல்லாம்
ஏவலர் தேடி விரைந் தேகினார்
காட்டின் கரடின் மலை இடுக்கெல்லாம்
தேடினார் தேய்வு இலா மனிதனையே
வீட்டில் வீரர் எவரும் தங்காமற்
விரும்பி விரவியே தேடி அலைந்தார்.
ஆற்றின் கரையில் மணல் பரப்பினிலே
அயற்சி சோகம் சிறிது மின்றிக்கா
காற்றின் தாலாட்டில் தழுவுந் தூக்கத்தில்
சிரித்துச் சிறந்த மனிதன் இருந்தான்
போற்றிடும் மன்னர்க் கேற்ற மனிதன்
இவனெனப் புரட்டினர் காவலர் எழுப்ப.
தூக்கம் கெட்டதில் திடுக்கிட் டெழுந்தவன்
துன்பங் காவலர் உருவில் கண்டான்
மூக்கினைத் தேய்த்து முகமொளிரச் செய்தவன்
சிந்தனை யறுத்து சிரித்து நின்றான்.
ஊக்கி விடப்பட்ட காவலர் இருவரும்
“உடையைக் கொடுத்திடு” எனக் கேட்டார்.
மானத்தை மறைக்கும் கோவணம் தவிர
ஓரடி துணியும் இலா மனிதன்
வானத்தை நோக்கி வீணே சிரித்தான்
“வேடிக்கை நீங்கள் கேட்பதெ”ன்றான்
“தானத்திற் கொடுத்திட வேறு துணியேதும்
இல்லை” யெனச் சொல்லிக் கைவிரித்தான்.
வீடு திரும்பிய வெறுங்கைக் காவலர்
விரைந்து மன்னர் பால் விபரம் சொன்னார்
ஈடு இணையிலா இன்ப மனிதனின்
வெற்றுடம்புதனை விரித்துச் சொன்னார்;
நீடு நாள் நோய் வாடு மன்னவனோ
“நீசன் போகட்டும்” என விடுத்தார்.
பயனற வாழ் நாள் கழிவது உணர்ந்து
காக்கும் கரத்தை நீட்டிப் பார்த்தான்
சயனம் விட்டு சடக்கென எழுந்தவன்
பலகணி திறந்து பார்வை ஓட்டினான்
நயனம் நீரில் நனைந்திடு வகையிற்
காற்றினை முகர்ந்து முகம் மலர்ந்தான்.
சாலை வழிதனில் சீர் நடை நடந்தவன்
சாயும் பொழுதுவரை உலா வந்தான்
சோலையிற் புகுந்து சீட்டிக் குயிலின்
கூவலைக் கேட்டு உளம் மகிழ்ந்தான்.
கோலம் மாறிய மன்னரைக் கண்டவர்-
“வாழீ பல்லாண்டு” என்றே வாழ்த்தினர்.
தேவையே இன்றி நோய் எனச் சென்றால்
நாய் போல் நம்மை அலைய விடுவார்
வேலையே் செயாமல் தெய்வம் தொழாமல்
மருத்துவர் நம்பி சென்று விடாமல்
மந்திரச் சட்டை அணிந்த மன்னனை
தந்திர மருந்தென பின் பற்றுவோம்.