நான் தனிப்பட்டவன்

சின்னஞ் சிறு வயது முதலாக
நான் எல்லோரிலும் தனிப்பட்டு
பின்னல் விழுந்த மனங் கொண்டு
சன்னல் வழித் தோன்றும்
சித்திரக் காட்சிகள் போல்
என் கனவுகளில் மிதக்கின்றேன்.

எல்லோருக்கும் ஒரே விதமாக
இன்பமோ துன்பமோ ஒரே
ஊற்றிலிருந்து பிறக்கும் ஆயின்
எனக்கோ அதில் பாதிப்பில்லை.
சரியானதெல்லாம் என் பார்வைக்கு
சரியானதல்ல என்றே தோன்றும்.
தவறானதெல்லாம் என் மனதில்
தவறல்ல என்றே புரியும்.
தட்டையாய் இருக்கும் இப்
பூமியின் உருவம் உருண்டையாம்
நீரில் வளைந்து தெரியும்
மூங்கிற் கழியில் கோணல் ஏது?
பிறர்க்குப் புரியும் அறிவியல்
அறம் எல்லாம் எனக்கு மட்டும்
சிறகு கொண்டு சிந்திக்கத்
தூண்டிடும் இறக்கையுள்ள இரதம்.
விழுந்தால் எல்லோருக்கும் வலிக்கும்
எனக்கோ சிரிப்புத்தான் வரும்.
காதலும் எனக்குப் பிடிக்கும்
சாதலும் எனக்குப் பிடிக்கும்
ஏனெனில் இரண்டுமே மரணம்தான்.

வெய்யிலிற் கண் கூசினால்
மழையில் மேனி நனைந்தால்
தையத் தக்கா என என் மனம்
கூத்தாட்டம் போட்டு ஆடும்.
மாலையில் மங்கும் பரிதியை
மணப் பெண்ணாய் அங்கு
மாலை சூட வரும் மேகம் மாறி
வாய் பிளக்கும் சிங்கமாய்
வால் தூக்கிய குதிரையாய்
இறுதியில் பெரிய பூதமாய்
பொதிந்து மறைக்கும் போதில்
சாலையில் நின்று சாமியை,
படைத்திட்ட தேவனை என்னுடன்
பேசிட அழைக்கத் தோன்றும்.
ஏனெனில் என்றுமே ஒப்புமை
இல்லாத நான் தனிப் பட்டவன்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (6-Dec-12, 4:15 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 134

மேலே