ச்சீ....ச்சீ இவன் மனிதனில்லை......

நல்லவன் என்று தன்னைத்தானே
நினைத்துக் கொண்டு
நல்லவைக்கு நேரெதிராய்
நன்றாக செய்பவர்கள்

சுயநலமாய் இருந்திருந்தே
செல்வங்கள் சேர்த்து விட்டு
பிறர்நலனே பார்த்ததனால்
பிழைக்காமல் போனவரை
பேதை என்று சொல்பவர்கள்

புத்தி என்பது அவ்வளவு தான்
பிழைத்துப் போகட்டும் என
பெருந்தன்மையாய்
மன்னித்தாலும் மறந்தாலும்

இகழ்ந்தது போதாது இதில்
மனம் ஆறாதென இல்லாததை
இருப்பது போல் அவர் பற்றி
தூற்றுபவர்கள்

இருந்தென்ன இறந்தென்ன
இவனையும் மனிதனென்று
இனி நினைக்க மனமில்லை.......

நல்லோர் நிலை தாழ்ந்தாலும்
யாரையும் நிந்திப்பதில்லை
அவர் மனம் நொந்தாலே அது
சாபம் என்பதில் ஐயமில்லை

வாழ்வு முழுதும் ஈட்டிய சொத்து
நற்பெயர் தான் என்றோர்க்கு
அதற்கும் களங்கம் செய்பவனுக்கு
நரகத்திலும் இடமில்லை

கண்ணீரின் ஈரம்
கவிதையிலும் காயவில்லை
கடவுளாலும் திருத்த முடியாத இவர்களை என் கவிதை திருத்தும்
என்ற ஆசையும் எனக்கில்லை

எழுதியவர் : (7-Dec-12, 3:58 pm)
பார்வை : 196

மேலே