வெந்தயத்தால் ஆவதென்ன?

ஓடும் ரயிலை நான்
ஓடிப் பிடித்து ஏறி
தேடித் தேடி என்னிருக்கை
தனில் சென்று அமர்ந்தேன்.
பத்தே நிமிடம் தான்
குத்தியது என் வயிறு
பொத்தானைக் கழற்றி
பெருமுச்சு விட்டேன்.
உச்சந்தலை முதலாய்
மிச்சமேதும் வைக்காமல்
எச்சமிட ஏவியது
என் உடல் உணர்வு.

கழிவறை நோக்கி
எல்லாம் கடந்த பின்
உடந்தை வலியோ
உணர்வோ விடவில்லை.
மீண்டும் மீண்டும்
தாண்டிச் சென்று
வாண்டுச் சிறுவரிடம்
வாங்கிக் கட்டினேன்.

” நீர்க் குறைவு” நோய்
தீர்க்கமாய் முளைக்க
உலர்ந்திடும் உதடுகளால்
உள்ளம் துவண்டேன்.

என்னெதிர் இருக்கையில்
பின்னலைப் பிரித்தவள்
என்ன நினைத்தாளோ
என்னைப் பார்த்தாள்;
கைப்பையை எடுத்து
கை நிறைய வெந்தயத்தை
“பையப் பைய விழுங்கிடு
பாவம், சோர்ந்து விட்டாய்”
குடிப்பதற்கு நீரும்
கொடுத்தவள் கருணையில்
பிடித்த என் கோளாறு
பிடிப்பின்றி மறைந்தது

அம்மா நீ வாழ்க!
உன் வைத்தியமும் வாழ்க
என்றே நான் வாழ்த்தி
அன்றாடம் அணிகின்ற
சட்டைப் பையினிலே
சுமக்கிறேன் வெந்தயத்தை.
”வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன”
என்ற நல் கேள்விக்கு
இதுவே என் பதிலாகும்

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (7-Dec-12, 5:07 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 154

மேலே